கண் இமையைக் கூட உறைய வைக்கும் மைனஸ் 67 டிகிரி குளிர்... உறைந்த ரஷிய நகரம்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 19 Jan, 2018 07:35 am

ரஷ்யாவில் தற்போது மிகக் கடுமையான குளிர்காலம் நிலவுகிறது. ரஷ்யாவின் வடக்குப் பகுதி எப்போதும் குளிராக இருக்கும். இந்தப் பனிக் காலத்தில் மைனஸ் 67 டிகிரி செல்ஷியஸ்சுக்கு (88.6 டிகிரி ஃபாரன்ஹீட்) கீழ் வெப்பநிலை சென்றுவிட்டது. என்னதான் பாதுகாப்பு ஆடை அணிந்தாலும் உடலை உறைய வைக்கும் அளவுக்குக் குளிர் சென்றுவிட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

யாகுதியா என்பது மாஸ்கோவில் இருந்து கிழக்கே 5300 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். எப்போதும் குளிர்காலம்தான் இந்தப் பகுதியில்.

இந்தப் பகுதியில் உள்ள ஒய்மைக்கன்தான் உலகில் மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே மிகவும் குளிரான பகுதி. இந்தப் பகுதியின் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 71 டிகிரி செல்ஷியஸ். 2013ம் ஆண்டு பதிவானது. வழக்கமாக வெப்பமானியில் மைனஸ் 50 வரை மட்டுமே கணக்கீடு இருக்கும். இங்கு, மைனஸ் 71 என்று செல்லும்போது, வெப்பமானியே கூட உடைந்துவிடுமாம்.

குளிர் இந்தப் பகுதி மக்களுக்குப் பழகி போன ஒன்று. மைனஸ் 40 டிகிரி என்பது எல்லாம் இங்கு மிகச் சாதாரண விஷயம். பள்ளிக் குழந்தைகள் கூட மைனஸ் 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் தங்கள் பள்ளிகளுக்குச் சர்வசாதாரணமாகச் செல்வார்களாம். ஆனால், தற்போது வெப்பநிலை மேலும் கீழே இறங்கிவிட்டது. இதனால், மக்கள் வெளியே வர வேண்டாம் என்று அரசு அறிவித்துள்ளது.

பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் என்று உத்தரவே பிறப்பித்துள்ளார்களாம். வீடுகளிலும் வெப்பமூட்டும் கருவியை எப்போதும் இயக்க வேண்டும் என்றும், மின்சாரம் துண்டிக்கப்பட்டால் தப்பிக்க ஜெனரேட்டர் உள்ளிட்டவை ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

சில தினங்களுக்கு முன்பு காரில் ஐந்து பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர். திடீரென வழியில் கார் நின்றுவிட்டது. வெளியே உறைய வைக்கும் குளிர். உள்ளேயே அடைபட்டு இருந்தால் விரைவில் உயிரிழந்துவிடும் சூழல். எனவே, அருகில் இருந்த பண்ணைக்குள் சென்றுவிடலாம் என்று நினைத்து ஐந்துபேரும் காரில் இருந்து இறங்கியிருக்கின்றனர்.

இவர்களில் இரண்டு பேர் தெர்மல்வேர் எனப்படும் வெப்ப உடை உள்ளிட்டவற்றை அணியவில்லை. அருகில்தானே பண்ணை வீடு உள்ளது என்று தவறாகக் கணக்கிட்டுவிட்டனர். மைனஸ் 50 - 60 என்று இருந்த குளிர்நிலை காரணமாகச் சிறிது நேரத்திலேயே இருவரும் உறைந்துவிட்டனராம்.

சில தினங்களுக்கு முன்பு இந்தப் பகுதியைச் சேர்ந்த அனஸ்தேசியா க்ருட்ஜேவா என்ற பெண் தன்னுடைய தோழிகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரல்.

இந்தப் பெண்களின் கண் இமை முழுக்க ஐஸ் படிந்துள்ளது. அதில், பெண் ஒருத்தி கண்களை வேகமாகச் சிமிட்டினாலும் கூட ஐஸ் கீழே விழாமல் இமையை இறுக்கமாகப் பற்றியிருக்கிறது. கண்ணை உறைய வைக்கும் அளவுக்கு அங்குக் குளிர்நிலை இருப்பதை அந்தப் படத்தை, வீடியோவை பார்ப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

குளிர் அவர்களுக்குப் பழகிப்போன ஒன்று என்பதால், உள்ளூர் ஊடகங்களில் மைனஸ் 67 டிகிரியை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், நம்மைப்போன்ற வெப்ப மண்டல நாடுகளில், குறைவான குளிர் உள்ள நாடுகளில் வாழும் மக்களுக்கு இந்தச் செய்தி அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. இதனால், அந்தப் பெண்மணியின் செல்ஃபி போட்டோ வைரலாகியுள்ளது என்கின்றனர் உள்ளூர் மக்கள். இதனால், யாகுதியா பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது. சீனாவைச் சேர்ந்த சில மாணவர்கள் இங்கு வந்து, உள்ளாடையுடன் குளிர்ந்த நீரில் இறங்கி சாகசம் செய்துள்ளனர். சுற்றிலும் வெப்ப ஆடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் வைத்திருந்தாலும் குளிர்ந்த நீரில் இறங்கியது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.