சொந்த நாடு திரும்ப வழியில்லை... 2 மாதமாக விமான நிலையத்தில் தங்கியிருக்கும் குடும்பம்

  Anish Anto   | Last Modified : 29 Dec, 2017 09:43 am

தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா வந்த ஜிம்பாவே நாட்டை சேர்ந்த குடும்பம் ஒன்று கடந்த 2 மாதத்திற்கும் மேலாக பேங்காக் விமான நிலையத்தில் காக்க வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

4 பெரியவர்கள் மற்றும் 4 குழந்தைகள் அடங்கிய ஜிம்பாவே நாட்டை சேர்ந்த குடும்பம் ஒன்று தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா வந்துள்ளது. தாய்லாந்தை சுற்றி பார்த்த அவர்கள் கடந்த அக்டோபர் 23-ம் தேதி பேங்காக் விமான நிலையத்தில் இருந்து ஸ்பெயின் செல்ல வந்துள்ளனர். உக்ரைன் வழியாக ஸ்பெயின் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்துள்ளனர். ஆனால் அவர்களிடம் ஸ்பெயின் நாட்டிற்கு செல்வதற்கான விசா இல்லாததால் அவர்கள் பயணம் செய்ய விமான நிலைய அதிகாரிகள் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.

இதனை தொடர்ந்து அந்த குடும்பத்தினர் விமான நிலையத்திலேயே காத்திருந்தனர். தாய்லாந்து நாட்டு விசா காலம் முடிந்து விட்டதால் அவர்களால் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லவும் முடியவில்லை. இதனிடையே அந்த குடும்பத்தினர் மீண்டும் தாய்லாந்திற்குள் நுழைய தடை விதித்து அந்நாட்டு குடிவரவு துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதனால் அந்த குடும்பம் மேலும் சிக்கலில் மாட்டிக் கொண்டது.


ஜிம்பாவேயில் நிலவி வரும் உள்நாட்டு குழப்பம் காரணமாக மீண்டும் தங்கள் நாட்டிற்கு செல்லவும் அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். விமான நிலையத்திலேயே இவ்வாறாக 2 மாதம் அந்த குடும்பம் தங்கி உள்ளது. விமான சேவை நிறுவனங்கள் இவர்களுக்கு தேவையான உணவை வழங்கி உள்ளன. சமீபத்தில் தாய்லாந்தை சேர்ந்த ஒருவர் இந்த குடும்பத்தில் உள்ள குழந்தைக்கு கிறிஸ்துமஸ் பரிசளிக்கும் புகைப்படத்தை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார். அதனை தொடர்ந்தே இவர்களின் சோக கதை குறித்து வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது. தற்போது இந்த குடும்பத்தை பாதுகாப்பான இடம் ஒன்றில் தங்க வைப்பது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.