சவூதி அரேபியா: சட்ட விரோதமாக தங்கிய 3,37,281 பேர் கைது

  Anish Anto   | Last Modified : 05 Jan, 2018 07:30 am

சவூதி அரேபியா நாட்டில்  முறையான அனுமதி இன்றி தங்கி இருந்த 3,37,281 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா உட்பட பல்வேறு தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள் வளைகுடா நாடுகளுக்கு பல்வேறு பணிகளுக்காக செல்கின்றனர். இவ்வாறு செல்பவர்களில் சிலர் விசா காலம் முடிந்த பின்னரும் முறைகேடாக அந்நாட்டில் வசித்து வேலை பார்த்து வருகின்றனர். முறையான வசிப்பிட மற்றும் வேலைக்கான அனுமதி இல்லாமல் தங்கி இருக்கும் வெளிநாட்டினரை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக சவூதி அரேபியா அரசு கடந்த வருடம், சட்டவிரோத வெளிநாட்டினர் இல்லாத நாடு எனும் திட்டத்தை துவங்கியது.

இந்த திட்டத்தின் கீழ் சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பர். கண்டுபிடிக்கப்பட்ட தினத்தில் இருந்து 90 நாட்களில் அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிவிட வேண்டும். அவ்வாறு செல்லவில்லை எனில் இந்திய மதிப்பில் 2 லட்சம் முதல் 16 லட்சம் வரை அபராதமாக செலுத்த வேண்டி இருக்கும் என எச்சரிக்கபட்டிருந்தது.

சவூதி அரேபியாவில் முறைகேடாக தங்கி இருப்பவர்களை கண்டறியும் பணி கடந்த நவம்பர் மாதம் துவங்கியது. இதில் தற்போது வரை 3,37,281 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 1,98,231 வெளிநாட்டினர் முறையான வசிப்பிட அனுமதி இன்றியும், 99,980 வெளிநாட்டினர் முறையான வேலை அனுமதி இன்றியும் சவூதியில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 65,715 பேர் தங்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதேபோல், சவூதியின் தெற்கு எல்லை வழியே முறைகேடாக நாட்டிற்குள் நுழைய முயன்ற 4,432 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 75% பேர் ஏமன் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். 32 லட்சம் இந்திய மக்கள் சவூதி அரேபியாவில் பணி நிமித்தமாக தங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close