காபூல் ஹோட்டலுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள்!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 21 Jan, 2018 09:01 am

ஆப்கானிஸ்தானில் நட்சத்திர ஹோட்டலுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நான்கு பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இன்டர்காண்டினல் ஹோட்டலில் நேற்று இரவு நான்கு தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். கையில் வைத்திருந்த வெடி குண்டுகளை வீசி அவர்கள் தாக்குதல் நடத்தி ஹோட்டலுக்குள் நுழைந்தனர். அங்கு இருந்த விருந்தினர்களை நோக்கி அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். 

பயங்கரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இன்னும் இரண்டு பேர் உயிருடன் உள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், உயிரிழப்பு பற்றிய தகவல் இல்லை. பயங்கரவாதிகள் பலரை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


இந்த ஹோட்டலில் மாகாண அதிகாரிகளுக்கான ஐ.டி தொடர்பான கருத்தரங்கம் நடந்ததாகவும், அரசு அதிகாரிகள் பலர் பயங்கரவாதிகள் பிடியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் தான், காபூலில் மிகப்பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், சம்பவம் நடந்த ஹோட்டல் மற்றும் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள மற்றொரு ஹோட்டல் பயங்கரவாதிகள் இலக்காக உள்ளது என்றும் எச்சரித்திருந்தது. இந்தச் சூழலில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

ஹோட்டலில் உள்ளவர்களை மீட்கவும், பயங்கரவாதிகளை சுட்டுக்கொல்லவும் பாதுகாப்புப் படையினர் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹோட்டலில் தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டு வருவதால், உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதே ஹோட்டல் கடந்த 2011-ம் ஆண்டுத் தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது, 21 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய ஒன்பது தலிபான் பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close