எதிரும் புதிருமாக இருக்கும் வடகொரியா- தென்கொரியா இடையேயான பேச்சு வார்த்தை மார்ச் 29ம் தேதி நடைபெற உள்ளது.
ஐ.நாவின் விதிமுறைகளை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஐ.நா பலமுறை எச்சரிக்கை விடுத்தும் வடகொரியா அதற்கு செவி சாய்க்கவில்லை.
இந்த பிரச்னையை சமாளிக்கும் பொருட்டு தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாகவே தென்கொரியாவில் அண்மையில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. இதன் தொடக்க விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் தங்கை கிம் யோ ஜோங் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டார்.
இதனையடுத்து தென் கொரிய அமைச்சகம் சார்பில் இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. இதில் வடகொரியா கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் எதிரி நாடுகளாக இருந்த வடகொரியா-தென்கொரியா பேச்சுவார்த்தையின் மூலமாக இணைய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.