மருத்துவர்களின் தவறால், உயிருடன் எம்பாமிங் செய்யப்பட்ட ரஷ்ய இளம்பெண்!

  SRK   | Last Modified : 09 Apr, 2018 01:12 pm


ரஷ்யாவை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிற்கு, வழக்கமாக உடலில் ஏற்றப்படும் சலைனுக்கு பதிலாக, எம்பாமிங் செய்ய பயன்படுத்தப்படும் ஃபார்மாலடிஹைடு கொடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷ்யாவின் உல்யாநோவ்ஸ்க் நகரில் வசித்து வந்த எகார்டினா ஃபெத்யேவா என்ற பெண், கடந்த மாதம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். அப்போது, அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், சலைன் (உப்பு நீர்) திரவத்தை உடலில் ஏற்றுவதற்கு பதிலாக வேறு ஒரு திரவத்தை ஏற்றியுள்ளனர். 

இரண்டு நாட்கள் கடும் வலியாலும், ஜுரத்தாலும் அவதிப்பட்டு வந்த எகார்டினா, பின்னர் கோமா நிலைக்கு சென்றார். பின்னர் அவரை தலைநகர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தபோது, இதய மற்றும் நுரையீரல் செயலிழந்து அவர் உயிரிழந்தார். அவர் இறந்ததற்கான காரணம் சரியாக தெரியவராத நிலையில், ஒரு மருத்துவர், அவருக்கு சலைனுக்கு பதில் தவறுதலாக ஃபார்மால்டிஹைடு திரவத்தை ஏற்றியதாக ஒப்புக்கொண்டார். ஃபார்மால்டிஹைடு எனும் திரவம், இறந்தபின் உடல் கெடாமல் இருப்பதற்கு செய்யப்படும் எம்பாமிங்கில் பயன்படுத்தப்படுவதாகும். 

"இது ஒரு கொலை. என் மகளின் உடலை அது உள்ளிருந்தே அரித்து விட்டது. சிகிச்சைக்கு பின் குளிரால் அவள் கடுமையாக அவதிப்பட்டாள். கம்பளிகள் போர்த்தியும் அவள் இதுவரை இல்லாத அளவு நடுங்கினாள். முதலில் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு ஏதோ தவறு நடந்து விட்டது என தெரிந்தது. ஆனால்,  அவர்கள் எதுவும் செய்யவில்லை. உடனடியாக ஏதாவது செய்திருக்கலாம். நான் எவ்வளவோ கெஞ்சினேன். ஆனால், அவர்கள் ஒரு சிகிச்சையும் கொடுக்கவில்லை" என எகார்டினாவின் தாய் பாரிஷ்னிகோவா கதறினார். 

இரு தினங்களுக்கு முன், எகார்டினாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், முழு விசாரணை நடத்த ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close