திரைத்துறையில் நிலவும் பாலின பாகுபாடுக்கு எதிராகவும் 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் பெண் படைப்பாளிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் பல பெண் இயக்குனர்கள் மற்றும் நடிகைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரான்ஸின் பாரிஸ் நகரில் கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக நடந்து வருகிறது. சர்வதேச நாடுகளின் நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்ட இதன் தொடக்க விழா பிரான்ஸ் நேரப்படி ஞாயிறு காலை தொடங்கியது.
அப்போது திடீரென அங்கு கூடிய பெண் இயக்குநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் பெண் இயக்குநர்கள் இயக்கிய பல படங்கள் திரையிடப்படவில்லை எனவும், பாலின பாகுபாடு காட்டப்படுவதாக கூறி, பெண் நட்சத்திரங்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் பல நாடுகளைச் சேர்ந்த பெண் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள் என 82 பேர் கலந்துகொண்டனர். இந்த போராட்டம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
திரைத்துறையில், ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் விவகாரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில், தற்போது கேன்ஸ் விழாவில் பெண்கள் புறக்கணிக்கப்படுவதாக நடந்த போராட்டம் மீண்டும் சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது.