காசா எல்லையில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி இஸ்ரேல் தலைநகராக ஜெருசேலம் நகரை அங்கீகரித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும், அப்போதைய இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ்-ல் உள்ள அமெரிக்கா தூதரகம் 6 மாத காலம் தான் அங்கு செயல்படும், பின்னர் ஜெருசேலம் நகருக்கு மாற்றப்படும் எனவும் அறிவித்தார். இதனால் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், அது ஒரு வழியாக கட்டுப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், இரு தினங்களுக்கு முன்பாக டெல் அவிவ்-ல் இருந்த அமெரிக்க தூதரகம் ஜெருசேலத்திற்கு மாற்றப்பட்டது. இதை எதிர்த்து பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காசா எல்லை பகுதியின் பல்வேறு இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் இஸ்ரேல் படையினர் போராட்டம் நடத்துபவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.
முதற்கட்டமாக நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 28 பேர் வரையில் கொல்லப்பட்ட நிலையில் தற்போதைய நிலவரப்படி பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 60 ஆகஉயர்ந்துள்ளது. இதில் 16 வயதுக்குட்பட்ட 8 குழந்தைகளும் அடங்குவர். மேலும் ஆயிரக்கணக்கில் படுகாயமடைந்துளளனர். இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன.