பிரான்ஸில் 4வது மாடியில் தொங்கிய குழந்தையை காப்பாற்றிய மாலி வாலிபர்

Last Modified : 28 May, 2018 11:03 pm

பாரீஸ் நகரில் 4வது மாடியில் தொங்கிய குழந்தையை ஸ்பைடர்மேன் போல, காப்பாற்றிய மாலி நாட்டைச் சேர்ந்த வாலிபருக்கு அந்நாட்டு அதிபர் நேரில் பாராட்டு தெரிவித்தார். 

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வேலைத் தேடி பிழைக்க சென்றவர் மமூது கசாமா (22). இவர் பாரீஸில் வடக்கு பகுதியில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். எனவே கூட்டத்தை வேடிக்கை பார்க்க சென்றார். அங்கு கட்டிடத்தின் 4வது மாடியில் பால்கனியை பிடித்தபடி 4 வயது குழந்தை அழுதபடி தொங்கிக் கொண்டிருந்தது.

அதை கீழே விழாமல் பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் நபர் பிடித்துக் கொண்டிருந்தார். இதை கீழே நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களில் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. இதைப் பார்த்த கசாமா, ஸ்பைடர்மேன் பாணியில் கட்டிடத்தின் முன்புறத்தில் சுவரை பிடித்தபடி சிலந்தி பூச்சி போன்று மேலே ஏறினார்.

பின்னர் மாடி பால்கனியில் தொங்கி கொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டு காப்பாற்றினார். இதற்கிடையே தீயணைப்பு படையினரும் அங்கு வந்தனர். அதற்கு முன்பாகவே குழந்தையை கசாமா காப்பாற்றிவிட்டார். அவர் காப்பாற்றிய வீடியோ ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அதை தொடர்ந்து மமூது கசாமாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன. 


ஸ்பைடர்மேன் பாணியில் குழந்தையை காப்பாற்றிய மமூது கசாமாவை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். பாரிஸ் மேயர் ஆன்னி ஹிடால்கோ பேஸ்புக் சமூக வலைதளத்தில் வாழ்த்தி நன்றி தெரிவித்தார். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.