சரிந்தது ட்ரம்பின் சொத்து மதிப்பு
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சொத்து, அவர் பதவியேற்கும் போது இருந்ததை விட 100 கோடி டாலர் அளவுக்கு தற்போது குறைந்தது. பதவியேற்கும் போது சுமார் 380 கோடி டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு தற்போது 280 கோடி டாலராக சரிந்திருப்பதாக அமெரிக்க சந்தை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ட்ரம்ப் டவரில் கோல்ப் (Golf) மைதானங்களில் கிடைத்து வந்த வருவாய் கணிசமாக குறைந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ட்ரம்பிற்கு சொந்தமான 16 கோல்ப் மைதானங்கள் மூலமாக கிடைத்து வந்ததில் 70 மில்லியன் டாலர்கள் அளவுக்கு வருவாய் சரிந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புளோரிடாவில் உள்ள ட்ரம்பிற்கு சொந்தமான க்ளப் உட்பட மேலும் பல ரிசார்ட்டுகள் மூலமாக கிடைத்த வருவாயும் கடுமையாக சரிந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்தில் இரு கட்டடங்களுக்கு நடுவே கயிறு கட்டி நடக்கும் போட்டி
சுவிட்சர்லாந்தில் பிரமாண்டமான இரு கட்டடங்களுக்கு நடுவே கயிறுகட்டி 21 கிலோ மீட்டர் தூரம் நடந்தவர்களைப் பார்த்த பார்வையாளர்கள் பீதியில் உறைந்தனர். Samuel Volery என்பவர் தலைமையிலான குழுவினர் இந்த சாகசத்தில் ஈடுபட்டனர். ஜூரிச் நகரில் இரு கட்டடங்களுக்கு நடுவே சுமார் 330 அடி உயரத்தில் கயிறு கட்டப்பட்டிருந்தது. அதன் மீதேறி 80 முறை போய் திரும்பி வரவேண்டும் என்பது போட்டியின் விதிமுறை. இவ்வாறாக இரு கட்டடத்திற்கும் இடையே தொடர்ந்து 16 மணி நேரம் நடந்து, இந்த சாதனையை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர். உலக சாதனையாக இது விரைவில் அங்கீகரிக்கப்பட உள்ளது.
கலிபோர்னியா கவர்னர் தேர்தலில் இந்திய என்ஜினீயர் போட்டி
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம் கவர்னர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய கம்யூட்டர் என்ஜினீயர் போட்டியிட உள்ளார்.
இவரது பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல அங்கீகாரம் கிடைத்துள்ளது. நான் கவர்னரானால் லஞ்சத்தை ஒழிப்பேன் என வாக்குறுதி அளித்துள்ளார். கலிபோர்னியாவில் இந்தியர்கள் அதிக அளவில் உள்ளனர். இம்மாகாணத்தில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பவர்கள் இவர்கள் தான். எனவே இத்தேர்தலில் சுபம்கோயலுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது.
150 அடி உயர கிரேன் மீது நின்று திருமணம் செய்து கொண்ட ஜோடி!
ஸ்காட்லாந்தை சேர்ந்த பேரி - கேட் இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்ய முடிவெடுத்தார்கள். வித்தியாசமாக 150 அடி உயரம் கொண்ட கிரேன் மீது ஏறி நின்று திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் நண்பர்கள் புடைச்சூழ திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னர் புதுமண ஜோடிகள் முத்தம் கொடுத்து மகிழ்ந்தார்கள்.
தம்பதிகள் திருமணம் செய்ய உதவியாக இருந்த கிரேன் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும் ஸ்காட்லாந்தின் மிகவும் தனித்துவமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் இடத்தில் கிரேன் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது
டி-சர்ட் போட்டா மாதிரியும், போடாத மாதிரியும்: இணையத்தில் மேர்ச்சலாக்கிய சட்டை!
Balenciaga (பெலேன்சியாகா) என்னும் ஃபேஷன் நிறுவனம், 2018-ம் ஆண்டுக்கான சம்மர் கலெக்ஷனாக, 1290 டாலருக்கு ஆண்களுக்கான டி-ஷர்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் விலை பலரை ஆச்சரியப்படுத்தவில்லை என்றாலும், இதன் வடிவமைப்பு பலருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு டி சர்ட்டின் முன்பு, கட்டம் போட்ட சட்டை மாட்டி வைத்திருப்பது போல இதன் வடிவமைப்பு உள்ளது. சட்டையா அல்லது இது ஹெங்கரா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.