ஜூன்.19, 2018 - உலக செய்திகள்

  Padmapriya   | Last Modified : 19 Jun, 2018 07:29 pm

breaking-world-news

மூன்றாவது முறையாக சீனாவில் வட கொரியா அதிபர்

இன்றும், நாளையும் அவர் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பு, பேச்சுவார்த்தை தொடர்பாக சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிடம் கிம் ஜோங் உன் விவரிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்திப்பின் போது இருநாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் உடனான சந்திப்புக்குப் பின்னர் முதன் முறையாக கிம்-ஜோங்-உன் சீனா சென்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

அமெரிக்க பாடகர் எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாக்சன் படுகொலை

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகரான எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாக்சன் (XXXTentacion) அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

புளோரிடா பகுதியைச் சேர்ந்த ஜாஹேஷ் ஆன்ஃப்ராய் (Jahseh Onfroy) என்ற 20 வயது இளைஞர், தனது ஹிப் - ஆப் (hip - op) இசைத் திறமையால் எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாக்சன் (XXXTentacion) என்ற பெயரில் பிரபலமானார்.

ப்ளோரிடாவின் டீர்பீல்ட் கடற்கரையில் உள்ள ஒரு இருசக்கர வாகன கடைக்கு நடந்து சென்ற எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாக்சனை, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாக்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவில் சட்ட விரோத குடியேறிகள் 5 பேர் பலி: ரோந்து படையினரிடம் இருந்து தப்ப முயன்றபோது விபத்து

டெக்சாஸ் மாகாணத்தில் மெக்சிகோ எல்லையை ஒட்டி உள்ள சான் அன்டோனியோ நகரில் நேற்று முன்தினம் எல்லை ரோந்து படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் 3 கார்கள் வேகமாக வந்தன. அவற்றில் சட்டவிரோத குடியேறிகள் இருக்கக்கூடும் என சந்தேகித்த எல்லை ரோந்து படையினர் அந்த கார்களை தடுத்து நிறுத்தினர். அவற்றில் 2 கார்கள் மட்டும் நின்றன. மற்றொரு கார் நிற்காமல் வேகமாக சென்றது. உடனே ரோந்து படையினர் தங்களுடைய காரில் அந்த காரை விரட்டி சென்றனர்.

சட்டவிரோத குடியேறிகள் இருந்த அந்த கார் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் சென்றதாக தெரிகிறது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த கார் உருக்குலைந்து போனது.

இந்த கோர சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர். மேலும் 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஒருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

காரை அதிவேகமாக ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பாக்.முன்னள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மனைவியின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாக தகவல்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மனைவி கல்சூம் ஷெரீப் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். புற்றுநோயால் அவதிப்படும் கல்சூம் ஷெரீப் லண்டனில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

லண்டனில் சிகிச்சை பெறும் மனைவி கல்சூம் ஷெரீப்பை, நவாஸ் ஷெரீப் அவ்வப்போது நேரில் சென்று சந்தித்தும், சிகிச்சை முறைகளையும் கேட்டறிந்தும், உடன் இருந்து கவனித்தும் வருகிறார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஹார்லே ஸ்ட்ரீட் கிளினிக்கில் கல்சூம் ஷெரிப், சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை, கல்சூம் ஷெரிப்புக்கு இருதய மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதையடுத்து, அவசர சிகிச்சை பிரிவில் கடந்த 14 (ஜூன்) ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட கல்சூம் ஷெரீப், தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

சீனப் பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை

சீனப் பொருட்களுக்கான  வரிவிதிப்பை அறிவிக்க இருப்பதாக ட்ரம்ப்  எச்சரித்திருக்கிறார். 200 பில்லியன் டாலர்கள் அளவிலான சீன இறக்குமதி பொருட்களின் மீது 10 சதவீதம் கூடுதல் வரிவிதிப்பு செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.