தாய்லாந்து: தாமாக முன்வந்து மீட்புப்பணியில் ஈடுபட்ட முன்னாள் கடற்படை அதிகாரி உயிரிழப்பு!

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2018 03:59 pm

thailand-cave-rescue-ex-navy-diver-dies-on-oxygen-supply-mission

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை, தாமாக முன்வந்து மீட்புப்பணியில் ஈடுபட்ட முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மரணமடைந்துள்ளார்.

தாய்லாந்து நாட்டில் மா சே நகரில் உள்ள தாம் லுவாங் என்ற 10 கி.மீ நீளமுடைய குகை ஒன்று உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக கால்பந்து பயிற்சியாளர் மற்றும் 11 முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களை அழைத்துக்கொண்டு சுற்றுலாவுக்கு சென்றார். இந்த குகையை அவர்கள் பார்வையிடச் சென்ற போது, அங்கு மழை தீவிரமடைந்ததால் யாரும் குகையைவிட்டு வெளியே வரமுடியவில்லை.  குகையை விட்டு வெளியே செல்லும் பகுதி முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது.

பின்னர் இவர்களை காணவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டு, கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுற்றியுள்ள பல்வேறு நாடுகளும் சிறுவர்களை தேடும் பணிக்கு உதவின. அவர்களின் சைக்கிள், பொருட்கள் குகைக்கு வெளியே இருந்ததை பார்த்து, சிறுவர்கள் அங்கே சிக்கி  கொண்டிருப்பது தெரிய வந்தது. 

ஒரு வாரத்திற்கு மேலாகியும், இவர்களை கண்டுபிடிக்க முடியாமல் இருந்த நிலையில், அவர்கள் இறந்திருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் உள்ளே சென்ற நீச்சல் வீரர் ஒருவர் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்தார். உணவு இல்லாமல் சோர்வடைந்த நிலையில் இருந்த அவர்களுக்கு தொடர்ந்து உணவு, மருந்துகள் முதலியவை வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களை மீட்பதற்கு கால தாமதமாகும் என தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் நீர் குறைந்தால் தான் அவர்கள் வெளியே வர முடியும் அல்லது அவர்கள் நீந்தி தான் வர வேண்டும் என மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அவர்கள் நலமுடன் உள்ளதாகவும் தாய்லாந்து ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மீட்புப்பணியில் ஈடுபட்ட கடற்படை முன்னாள் அதிகாரி ஒருவர் உள்ளே ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மரணமடைந்துள்ளார். இவர் தாமாக முன்வந்து சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு ராணுவம் மற்றும் கடற்படை சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close