வீக்லி நியூஸுலகம்: கருப்புநிறத்தழகும் காதல் சீர்திருத்தமும் தெறித்தப் புகைப்படங்கள்!

  Padmapriya   | Last Modified : 29 Jul, 2018 11:44 am
interesting-world-news-happenings-around-the-world

உலகின் மிக அழகான குழந்தை என்று கொண்டாடப்படுகிறாள் 

இந்த வாரம் உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்று வருபவள் ஜேர் (5). நைஜீரியாவைச் சேர்ந்த இவளது 3 படங்களை ஒளிப்படக் கலைஞர் மோஃப் பாமுயிவா இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்திருந்தார். இன்றளவிலும் நிறவெறி ஓங்கி நிற்கும் நிலையில், இந்தக் கருப்பு நிற நைஜீரிய குழந்தை தான் உலகின் அழகிய குழந்தை என்ற பெருமையை பெற்றிருக்கிறார். அந்த அளவுக்கு இவளுக்கு நாடுகளைக் கடந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

ஜேரை படமெடுத்த மோஃப் கூறுகையில், "அவளுக்காக நான் எந்த நுட்பத்தையும் பயன்படுத்தவில்லை. அவளது பெரிய கண்களும் பளிங்கு போன்ற தோலும் அடர்த்தியான முடியும் தான் படத்தில் அதிகம் பேசுகின்றன. இயற்கையிலேயே அவள் அழகு. இவளது படங்களைப் பார்ப்பவர்கள் உயிருள்ள குழந்தை என்றே நினைப்பதில்லை. அழகுப் பதுமை என்கின்றனர். அவளைச் சிரிக்க வைக்க தான் மிகவும் முயற்சித்தேன். ஆனால் அவள் இயல்பாக எடுத்த படங்களில் தான் மிகவும் அழகாக இருக்கிறாள்'' என்று ஜேர் குறித்து பூரித்துப் பேசுகிறார். 

கலாய்ப்புக்குள்ளான ஆகச் சிறந்ததாய் கூறப்படும் கட்டிடம் 

சீனாவின் கியாங் என்ற நகரத்தில் 108 மீட்டர் உயரத்தில் அலுவலகங்கள், ஷாப்பிங்க் மால், சொகுசு ஹோட்டல் என அனைத்து அம்சங்களும் கொண்ட கட்டிடம் சமூக வலைதளங்களில் கலாய்ப்புக்குள்ளாகி இருக்கிறது.  ஏனெனில் கட்டிடத்தின் கடைசி மாடியில் இருந்து அருவி கொட்டுவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது தான் மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய  அருவி என்றும் அந்த கட்டுமான நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், நெட்டிசன்கள் அதை நகைப்புக்குள்ளாக்கியுள்ளனர். அதாவது 2 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டி முடிக்கப்பட்ட அந்த கட்டிடத்தில், இதுவரை 6 முறை மட்டுமே அந்த அருவியில் தண்ணீர் வந்துள்ளது. ஏனென்றால், இந்த அருவியில் ஒரு மணி நேரம் தண்ணீர் வருவதற்கு மோட்டார் இயக்க மட்டும் 120 டாலர்கள் செலவாகின்றனவாம். நீரை கீழே இருந்து மேலே மோட்டார் மூலம் ஏற்றவே இந்த செலவு.

பின்பு கீழே கொட்டும் தண்ணீர் மற்றும் மழை நீர், ஒரு டாங்கில் சேமிக்கப்படுகிறது. இதனால் இந்த நகரின் நிலத்தடி நீர் வளம் அதிகரிக்கும் என்றும் அந்நிறுவனம் கூறியது. ஆனால் ''தேவைப்பட்டால் மாதம் ஒரு முறை கண்ணாடியை துடைக்க இந்த நீர் வீழ்ச்சியை பயன்படுத்தலாம்'' என்று கலாய்த்த படி இருக்கிறார்கள் நெட்டிசன்கள்.  

பேரிடர் பணியில் ரோபோ!

பேரிடர் காலங்களில் பயன்படும் வகையில் புதிய ரோபோவை இத்தாலி நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இத்தாலி தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த ரோபோ, ஊர்ந்து செல்லத்தக்க வகையில் நான்கு கால்களும், மனிதர்கள் பயன்படுத்துவதைப் போன்று இரண்டு கைகளும் கொண்டுள்ளன.

ஒன்றரை மீட்டர் உயரமும் 93 கிலோ எடையும் கொண்ட இந்த ரோபோ தற்போது 6 கிலோ எடை கொண்ட செங்கலைத் தூக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் குறுகலான இடங்களிலும் சிக்கியுள்ள காங்கிரீட், கட்டைகள் உள்ளிட்ட பொருட்களை அறுத்தெடுக்கும் வகையில் சிறிய சக்தி வாய்ந்த ரம்பமும் பொறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் சமயங்களில் மீட்புப் பணியில் இந்த ரோபோவை ஈடுபடுத்துவது குறித்து இத்தாலிய அரசு பரிசீலித்து வருகிறது.

சீர்திருத்தம் கூறும் காதல் படம்!

வங்கதேசத்தில் நாட்டில் பிரபல பத்திரிக்கை ஒன்றில் புகைப்பட பத்திரிக்கையாளராக பணியாற்றி வருபவர் ஜிப்பான் அஹமத். இவர் கடந்த வியாழன் அன்று தாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் மழையினை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு அமர்ந்திருந்த காதல் ஜோடி மழையில் அமர்ந்து முத்தம் இட்டுக்கொண்டுள்ளனர். இந்த காட்சியை தற்செயலாக படம் பிடித்த ஜிப்பான் அஹமத் தனது முகப்புத்தகத்தல் பதிவேற்றியுள்ளார்.

இந்த புகைப்படத்தை பதிவேற்றியதற்காக அவர பணிபுரிந்து வந்த நிறுவனம் அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளது. நீக்கத்திற்கான காரணம் குறித்து கேட்கையில் இதுவரை பதில் அளிக்கப்படவில்லை என ஜிப்பான் அஹமத் தெரிவித்துள்ளார்..

இது குறித்து ஜிப்பான் அஹமத், ''இந்த புகைப்படத்தினை எடுக்க சம்பந்தப்பட்ட காதலர்கள் கூட மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் என் நிறுவனம் எந்த காரணமும் தெரிவிக்காமல் என்னை பணியில் இருந்து நீக்கியது வேதனையளிக்கின்றது'' என தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த புகைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இஸ்லாமிய நாடாட வங்கதேசத்தில் பெண்கள் வெளியே வருவதற்கு கூட கட்டுப்பாடுகள் உண்டு, இந்நிலையில் கட்டுப்பாடுகளை மீறி ஒரு பெண் தன் காதலுருடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட அனுமதித்தது அந்நாட்டு இளைஞர்களிடன் வரவேற்பினை பெற்றுள்ளது.

செவ்வாய் கிரகத்திலும் உப்பு நீர் ஏரி!

செவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி இருப்பதை இத்தாலிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மார்சிஸ் ((MARSIS)) என்ற தொலைநோக்கி மூலமாக நடத்தப்பட்ட ஆய்வில் பூமியை நோக்கியுள்ள செவ்வாய் கிரகத்தின் தெற்குப் பகுதியில் இந்த ஏரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

நிலத்தினுள் ஆழ்ந்த இடத்தில் இருப்பதால் அந்தத் தண்ணீர் உப்பு நீராக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இத்தாலி ஆராய்ச்சியாளர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து 2020ம் ஆண்டு புதிய ரோவர் ஒன்றை அனுப்பி குறிப்பிட்ட உப்பு நீர் ஏரியை ஆய்வு செய்ய நாசா முடிவு செய்துள்ளது. மேலும் குறிப்பிட்ட நீரில் ஏதேனும் உயிரினங்கள் உள்ளனவா என்றும், அதன் மூலம் மனிதர்கள் அங்கு சென்று வாழ முடியுமா என்றும் ஆய்வு செய்ய நாசா திட்டமிடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close