வாஜ்பாய் மறைவு: அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இரங்கல்!

  முத்துமாரி   | Last Modified : 17 Aug, 2018 12:22 pm
from-uk-to-pakistan-tributes-pour-in-from-all-over-for-vajpayee

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் மறைவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன. 

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும்,  முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று(ஆகஸ்ட் 16) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவமனையில் இருந்து டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது வாஜ்பாயின் உடல். அங்கு அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் அவரது உடல் இன்று காலை 11.30 மணியளவில் பாஜக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கட்சியினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. வாஜ்பாயின் மறைவுக்கு இந்தியா முழுவதுமுள்ள தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்திய நிலையில், உலக நாடுகளின் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்துள்ளனர். 

அமெரிக்கா: 

வாஜ்பாயின் மறைவு குறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாஜ்பாய் மறைவு எங்களை வருத்தமடைய செய்துள்ளது. இந்தியாவின் மிகச்சிறந்த தலைவர்களுள் அவரும் ஒருவர் என்பதை இந்த தருணத்தில் நாங்கள் நினைவு கூறுகிறோம். அமெரிக்கா மதிக்கக்கூடிய தலைவர்களில் அவர் மிகமுக்கியமானவர். அமெரிக்காவுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தார். அவரது மறைவுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாலத்தீவு: 

மாலத்தீவு தூதரகம் வெளியிட்டுள்ள தகவலில், "முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்" என கூறப்பட்டுள்ளது. 

வங்கதேசம்: 

வங்கதேச பிரதமர்  ஷேய்க் ஹசினா, "வாஜ்பாய் மறைவு என்னை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வங்கதேச மக்களுக்கு இன்று மிகவும் வருத்தமான நாள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்"

பாகிஸ்தான்: 

பாகிஸ்தான் பிரதமராக உள்ள இம்ரான் கான், "அதிகப்படியான அரசியல் ஆளுமை கொண்டவர் வாஜ்பாய். அவர் இந்தியா- பாகிஸ்தான் உறவை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார். அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது, பாகிஸ்தான் உடனான இந்தியாவின் உறவை மேம்படுத்தினார்" என தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் வாஜ்பாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது அவரது சாதனையை பறைசாற்றுவதாகவே உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close