தான்ஸானியா நாட்டில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது.
தான்ஸானியா நாட்டில் உள்ள விக்டோரியா ஏரியில் சென்ற படகு ஒன்று நேற்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பின்னர் உடனடியாக மீட்புப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 126 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மேலும் பலர் காணாமல் போனதையடுத்து தொடர்ந்து அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மேலும், உயிரிழந்த 10 பேர் மீட்கப்பட்டுள்ளதையடுத்து, பலி எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது. படகில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றியது தான் விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் படகை இயக்கியவர் சரியான பயிற்சி எடுக்காமல் படகை இயக்கியதாக அந்நாட்டு பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விபத்து பேரழிவு என அந்நாட்டு அதிபர் ஜான் மேகுபிலி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், "விபத்தில் உயிழந்தவர்களுக்காக நாடு முழுவதும் 4 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். இந்த விபத்திற்கு யாரேனும் காரணமாக இருந்தால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
newstm.in