ஊழல் வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபருக்கு சிறை!

  Padmapriya   | Last Modified : 06 Oct, 2018 01:40 pm

former-south-korean-president-sentenced-to-15-years-in-prison-on-corruption-charges

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் லீ மியுங் (76)மீதான ஊழல் வழக்கு நிரூபணமான நிலையில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.85.10 கோடி அபராதமும் விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

2008 முதல் 2013 வரை தென் கொரியாவின் அதிபராக லீ மியுங் பதவி வகித்தார். இந்த நிலையில் அவரது ஆட்சிக்காலத்தின்போது ஊழலில் ஈடுபட்டதாகவும், மோசடிகளைச் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.  

தாஸ் என்ற நிறுவனத்தின் மூலம் அரசு நிதியை லீ மியுங் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. அந்த நிறுவனம் தனது சகோதரருடையது என்று லீ தெரிவித்தார். அதைத்தொடர்ந்து தாஸ் நிறுவனத்துக்கு சாம்சங் நிறுவனம் பணத்தைப் பரிமாற்றம் செய்தது என்று அடுத்ததாகக் குற்றம்சாட்டு எழுந்தது.

ஆனால் இதை லீ மறுத்து வந்தார். அரசியல் நோக்கங்களுக்காக தன் மீது லஞ்ச ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக லீ அப்போது தெரிவித்தார். அதே நேரத்தில் அவருக்கு லஞ்சம் எதுவும் கொடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்ட சாம்சங் நிறுவனமும் கூறியது.

 ஊழல் மற்றும் மோசடி செய்தது தொடர்பான குற்றச்சாட்டு மீது அரசு தொடுத்த வழக்கை அடுத்து சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வந்தது. விசாரணையின் முடிவில் லீ மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால் அவருக்கு 15 ஆண்டு கால சிறைத்தண்டனையை வழங்கி தற்போது சியோல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

" இரு தரப்பு வாதங்களும் நிறைவுற்ற நிலையில்,  குற்றம் நடைபெற்றது நிரூபணமாகியுள்ள நிலையில் அதன் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு கடும் தண்டனை வழங்குவது தவிர்க்க முடியாததாகிறது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது" என நீதிபதி அவரது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 

அதுமட்டுமின்றி, லீ மியுங்குக்கு ரூ.85.10 கோடி அபராதத்தையும் கூடுதலாக விதித்து உத்தரவிடுவதாக நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக லீ மியுங் நீதி மன்றத்தில் நேரடியாக ஆஜராகவில்லை. 
முன்னாள் அதிராக இருந்தவருக்கு வழங்கப்பட்டுள்ள 15 ஆண்டு கால சிறைத்தண்டனை அந்த நாட்டு மக்களிடையேயும், உலக அரசியல் அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newtm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.