ஈராக்கில் மாடல் அழகி தாரா பேர்ஸ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதையடுத்து, அந்நாட்டின் மற்றொரு மாடல் அழகி ஒருவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்துகொண்டிருப்பதாக அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
ஈராக்கில் மேற்கத்திய கலாச்சாரத்துக்கு மாறி வரும் மாடல் அழகிகள் கொலை செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது. ஈராக் மாடல் அழகியும், சமுக ஆர்வலருமான தாரா பேர்ஸ் சமீபத்தில் தலைநகர் பாக்தாத்தில் காரில் சென்றுகொண்டிருக்கும் போது பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணம் தொடர்பாக உடனடி விசாரணை நடத்த அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி விசாரணையும் நடைபெற்று வருகிறது.
அவர் இஸ்லாமிய கட்டுப்பாடுகளை மீறி மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மாறி சுதந்திர வாழ்க்கை வாழ்ந்ததால் சுட்டுக்கொல்லப்பட்டார் என செய்திகள் வலம் வருகின்றன.
இதற்கு முன்னதாகவும், பிரபல மருத்துவர் டாக்டர் ரப்பீப் யாசிரி, சமூக ஆர்வலர் சுவாட் அல் அலி, ராஷா அல் ஹாசன் எனும் அழகுக்கலை நிபுணர் ஆகிய மூவரும் இதே காரணத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஈராக்கின் முன்னாள் அழகி ஷிமா குவாசிம் என்பவருக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது. 'இந்த வரிசையில் அடுத்தது நீ தான்' என்று அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கவும், அழகி ஷிமாவுக்கு பாதுகாப்பு அளிக்கவும் அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் ஷிமா தனது ட்விட்டர் பக்கத்தில் தாரா பேர்ஸ்-இன் கொலை குறித்து, 'தாரா ஒரு தியாகி, ஈராக்கில் வெற்றி பெற்ற பெண்கள் எல்லாம் கோழிகள் போல கொல்லப்படுகிறார்கள்' என பதிவிட்டார். இதைதொடர்ந்தே இவருக்கு இந்த மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in