வீக்லி நியூஸுலகம்: மரண தண்டனையை ஒழித்த வாஷிங்டனும் 20 பெண்களை வன்புணர்வு செய்த மெக்சிகோ கொடூரனும்

  Padmapriya   | Last Modified : 13 Oct, 2018 09:53 pm
interesting-world-news-happenings-around-the-world

இந்திய வம்சாவளி ஆப்ரிக்க கோடீஸ்வரர் கடத்தல்

தான்சானியாவைச் சேர்ந்த இளம் கோடீஸ்வர் முகமது டியூஜி. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவரது சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் கோடியாம். 
 
தனது பரம்பரை தொழிலான சில்லரை வியாபாரத்தை முகமது டியூஜி, 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைபெறும் தொழில் சாம்ராஜ்யமாக மாற்றியுள்ளார். விவசாயம், போக்குவரத்து, உணவு, உடைகள், மதுபானங்கள் மற்றும் சமையல் எண்ணெய் உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்களை ஆப்ரிக்கா முழுமைக்கும் இவர் நடத்தி வருகிறார். 

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட ஆப்ரிக்க பணக்காரர்கள் பட்டியலில் முகமது டியூஜி 17-ம் இடம் பிடித்திருந்தார். அந்த பத்திரிக்கை ஆப்ரிகாவில் இளம் கோடீஸ்வரர் என இவரை புகழ்ந்திருந்தது. தான்சானியாவில் பணக்காரர்கள் பட்டியலில் முகமது டியூஜி முதலிடம் பிடித்திருந்தார். 

இந்நிலையில், முகமது டியூஜி மர்மநபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியாவில் உள்ள தார் இ ஸலாம் எனும் நகரில் உள்ள சொகுசு விடுதியில் இருந்து அவர் கடத்தப்பட்டதாகவும், முகமூடி அணிந்து துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டபடி வந்த கடத்தல்காரர்களால் அவர் கடத்தி செல்லப்பட்டதாகவும் அந்நகரின் தலைமை போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தார் இ ஸலாம் கவர்னர் கூறுகையில், ''சொகுசு விடுதியில் உடற்பயிற்சி முடித்துவிட்டு வெளியே வந்த அவரை துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளனர். 2 வாகனங்களில் கடத்தல்காரர்கள் வந்துள்ளனர், அவர்கள் வெள்ளையர்கள் என தெரியவந்துந்துள்ளது. இந்த சம்பவத்தின் போது முகமது டியூஜியுடன் பாதுகாவலர்கள் யாரும் இல்லை. 

இது தொடர்பாக சந்தேகப்படும் நபர்கள் சிலரை ஏற்கெனவே கைது செய்து விசாரித்து வருகிறோம். முகமது டியூஜி கண்டுபிடித்து மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது'' என அவர் தெரிவித்தார். 

வாஷிங்டனில் மரண தண்டனை ஒழிப்பு

அமெரிக்காவில் இருக்கும் 50ல் 19 மாநிலங்களில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. அதை தொடர்ந்து அடுத்ததாக வாஷிங்டனிலும் மரண  தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. 
 
அதற்காக பிரசார இயக்கமும் நடத்தப்பட்ட நிலையில் அங்கு மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
மரண தண்டனைக்கு எதிராக பிரசார இயக்கம் மேற்கொண்டவர்கள் இதனை வரவேற்றுள்ளனர். இந்த தண்டனை ஒழிக்கப்பட்டதன் மூலம் மரணத்தை எதிர்நோக்கி இருந்த 8 பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 23 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் வாஷிங்டன் மாகாணத்தில் 2010-ம் ஆண்டில் இருந்து இதுவரை யாருக்கும் அந்த தண்டனை நிறைவேற்றப்படவில்லை.


பீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி பாய்க்கு 18 ஆண்டுகள் சிறையா? 

துருக்கியில் வாடிக்கையாளர் ஒருவருக்கு ஒப்படைக்க கொண்டு வந்த பீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி பாய்க்கு 18 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கபடலாம் எனதகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் துருக்கியின் வடமேற்குப் பகுதியிலுள்ள எஸ்கிசஹிர் நகரில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டப்பட்ட டெலிவரி பாய்க்கு  18 ஆண்டுகள் வரை சிறைத் தண்டணை விதிக்கப்படலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து துருக்கி போலீஸார் தரப்பில், "18 வயதான புரக் என்ற அந்த இளைஞர், ஹுசையின் என்ற வாடிக்கையாளருக்கு வழங்கிய பீட்சாவில் எச்சில் துப்பி அதனை தனது கைப்பேசியில் வீடியோவாக பதிவுச் செய்திருக்கிறார்.

இந்த காட்சியை சிசிடிவி கேமராவில் பார்த்த ஹுசையின் உறவினர் அவரிடம் இதைப் பற்றி கூற இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அந்த இளைஞருக்கு சுமார் 18 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது" என்று கூறியுள்ளனர்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை புரக் மறுத்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து அவர் கூறும்போதும் ”நான் பீட்சா டெலிவரி செய்ய இருக்கும் நபர் ஆர்டரின்போது எனது நண்பருடன் சண்டையில் ஈடுபட்டார். அதனால் அவர் சண்டைக்கார நபராக இருப்பார் என்று நினைத்து  நான் அந்த பீட்சா நல்ல நிலையில் உள்ளதா என்பதை அறிய அதன் பெட்டியை மட்டுமே திறந்து அதை புகைப்படம் எடுத்து என் நண்பனுக்கு அனுப்பினேன்” என்று கூறியுள்ளார்.

ஆனால் ஹுசையினோ நான் பீட்சா ஆர்டர் செய்யும்போது எந்தவித சண்டயிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார். எனினும் இந்த வழக்கில் வாடிக்கையாளரின் உணவை சேதப்படுத்திய குற்றத்துக்காக நுகர்வோர் நீதிமன்றத்தால் புரக் சிறைத் தண்டனை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20 பெண்களை வன்புணர்வு செய்த மெசிகோ கொடூரன் 

மெக்சிகோவில் உள்ள ஈகாடெகப் பகுதியை சேர்ந்தவர் ஜீவான் கார்லோஸ். இவரது மனைவி பெட்ரீசியா. இவர்கள் குடியிருந்த பகுதியில் பல இளம்பெண்கள் திடீரென மாயமாகினர். இதுபற்றி புகார்கள் அதிக அளவில் பதிவானது.

அதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இவர்களது வீட்டின் அருகே மனித உடல் உறுப்புகள் மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஜீவானையும், அவரது மனைவி பெட்ரீசியாவையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது. ஜீவான் கார்லோஸ் காமவெறி பிடித்தவன். அவனுக்காக மனைவி பெட்ரீசியா இளம்பெண்களை ஏமாற்றி தங்களது குடியிருப்புக்கு அழைத்து வருவாள். அங்கு பெண்களை கற்பழிக்கும் கார்லோஸ் பின்னர் அவர்களை கழுத்தை அறுத்து கொலை செய்து இருக்கிறான்.

கொலை செய்யப்பட்ட பெண்களின் உடலை துண்டு துண்டுகளாக வெட்டி அவற்றை நாய்க்கு உணவாக போட்டான். மேலும் சிலவற்றை வீட்டிற்குள்ளே புதைத்து வைத்தான். பிரிட்ஜில் பதுக்கி வைத்து உடல், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக விற்பனை செய்தான். இவனிடம் குழந்தையுடன் பெரும்பாலான பெண்கள் சிக்கினர். அக்குழந்தைகளை விற்றும் பணம் சம்பாதித்து இருக்கிறான்.

இதுபோன்று 20 பெண்களை அவன் கொலை செய்து இருக்கிறான். அதை தொடர்ந்து அவனை போலீசார் கைது செய்தனர். பெண்களை கடத்தி வந்து கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக அவனது மனைவி பெட்ரீசியாவும் கைதானார். இவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இயற்கை பேரிடர்களால் இழப்பு: இந்தியாவுக்கு 4வது இடம்!

இயற்கை பேரிடரின் போது ஏற்படும் சேதங்கள், வணிக ரீதியிலான பாதிப்புகள் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு ஐ.நா. சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவில் 1998-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் நிகழ்ந்த இயற்கை பேரிடர்களால் சுமார் 215 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

இயற்கை பேரழிவுகள் அதிகம் தாக்கும் நாடுகளாக அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. அமெரிக்காவில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் நிகழ்ந்த இயற்கை சீற்றத்தால், சுமார் ரூ.75 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக இயற்கை பேரழிவுகளால் அதிக இழப்புகளை சந்தித்த நாடுகளில் இந்தியா (ரூ.6 லட்சம் கோடி) 4-வது இடத்தை பிடித்துள்ளது. 

மேலும் இயற்கை சீற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் பத்து ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன. 
உலகம் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் நிகழ்ந்த இயற்கை பேரழிவில் சிக்கி, 13 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், 440 கோடி மக்கள் காயம் அடைந்துள்ளதாகவும் ஐ.நா.சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close