வீக்லி நியூஸுலகம்: ஜனநாயகத்தை காக்கத் தவறிய இலங்கையும் செயற்கை சூரியனை உருவாக்கிய சீனாவும்

  Padmapriya   | Last Modified : 17 Nov, 2018 04:17 pm

interesting-world-news-happenings-around-the-world

'நீதிபதி பதவிக்கு இஸ்லாமியர்களும் யூதர்களும் சரிப்பட மாட்டார்கள்'

அமெரிக்காவின் பொறுப்பு அட்டார்னி ஜெனரலாக உள்ள மேத்யூ விட்டேகர் மீண்டும் ஒரு சர்ச்சைக் கருத்தைக் கூறி சிக்கலில் மாட்டியுள்ளார். ஜெப் செசன்ஸ் அட்டார்னி ஜெனரல் பதவியிலிருந்து சில தினங்களுக்கு முன்னர் திடீரென நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு பொறுப்பு நபராக மேத்யூ விட்டேக்கர் நியமிக்கப்பட்டார். 

இந்த நிலையில், இஸ்லாமியர்கள், கடவுள் மறுப்பாளர்கள் மற்றும் யூதர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படக் கூடாது. ஏனெனில் அவர்களுக்கு விவிலிய முறையிலான நீதிக் குறித்த பார்வை இல்லை என்று கூறியுள்ளார். மத சார்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இவ்வாறு கருத்துக் கூறினார். 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு தொடர்பான விசாரணையில் இருந்து ஜெப் செசன்ஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விலகிக்கொண்டதில் இருந்து, டிரம்பின் விமர்சனத்துக்கு ஆளாகி வந்தார். ஜெப் செசன்ஸ் மிகவும் பலவீனமானவர் என கூறி வந்தார்.

மேத்யூ விட்டேகர் அமெரிக்க தேர்தலில், ரஷிய தலையீடு தொடர்பான ராபர்ட் முல்லர் குழுவின் விசாரணையை குறை கூறி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர ஊழல் புகாரில் சிக்கிய நிறுவனத்தில் பங்குதாரராகவும் மேத்யூ விட்டேகர் இருந்து வருகிறார். 

பிரபலமாகும் மேகன் மெர்கலின் கர்ப்ப கால உடைகள்

பிரிட்டன் அரண்மனைக் குடுமபத்தின் அனைத்து அசைவுகளும் செய்திகளாகும். பிரிட்டன் இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக கெங்சிங்டன் அரண்மனை தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டது. பிரிட்டன் இளவரசர் ஹரி- மேகன் மெர்கல் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். கடந்த மே மாதம் 19-ஆம் திகதி இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், மேகன் மெர்கல் கர்ப்பமாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இதன் பிறகே இதனை அதிகாரபூர்வமாக அரச குடும்பத்தினர் அறிவித்தனர். இந்த நிலையில் மேகன் மெர்கல் அணிந்து வரும் கர்ப்ப கால உடைகள் வைரலாகி வருகின்றன. அவரது கர்ப்ப காலத்தை கொண்டாடும் பிரட்டன் மக்கள் பிறக்க இருக்கும் குழந்தையை வரவேற்க தயாராகிவிட்டனர். அந்நாட்டு கடைகளில் மேகன் மெர்கலின் கர்ப்ப கால உடைகள் விற்பனைக்கும் வந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளன. 

கலிபோர்னியா காட்டுத் தீ: ஆயிரம் பேர் மாயம் 

கலிப்போர்னியாவில் கடந்த வாரம் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டது. இதுவரை காட்டுத் தீயில் சிக்கி 71 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.  உடல்களை அடையாளம் காண உறவினர்களிடமிருந்து டிஎன் ஏ மாதிரி வாங்கப்பட்டுள்ளதாக, கலிபோர்ணியா மாகாண அரசு கூறியுள்ளது. காட்டுத் தீயில் மாயமானவர்களின் எண்ணிக்கை 300 லிருந்து 1000 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து அவர்களை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், 12 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் காட்டுத்தீயில் சிக்கி நாசமாகி உள்ளதாகவும், கலிபோர்ணியா மாகாண அரசு தெரிவித்துள்ளது. 

 

கேலிக் கூத்தாகும் இலங்கை நாடாளுமன்ற நடவடிக்கை 

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் முன்னாள் பிரதமர் ரணில் ஆதரவு எம்.பி.க்கள் மீது மிளகாய்ப் பொடித் துாவி தாக்குதலில் ஈடுபட்டனர். 

மேலும் சபாநாயகர் வெளியேறிய பின், அவரது இருக்கையில் அமர்ந்தும் ரகளையில் ஈடுபட்டதாள் பரபரப்பு ஏற்பட்டது. 

இலங்கையில், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயின் பதவி பறிக்கப்பட்டு, அதிபர் சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து, நேற்று முன்தினம், நாடாளுமன்றத்தில் கடும் ரகளை ஏற்பட்டது. அப்போது சக எம்.பி.,க்கள் ஒருவருக்கொருவர் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், சபாநாயகர் கரு ஜெயசூரியாவை தாக்கவும் முயன்றனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த நிலையில், பார்லிமென்ட், நேற்று மீண்டும் கூடியதும், ராஜபக்சே ஆதரவு, எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது நாடாளுமன்றத்துக்கு  கத்தியுடன் வந்த, ரணில் ஆதரவு எம்.பி.,க்களை கைது செய்ய உத்தரவிடும் படி கோஷம் எழுப்பினர்.  அதற்கு ரணில் ஆதரவு, எம்.பி.,க்கள் கடும் கண்டனம் தெரிவித்ததால், சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனிடையே ராஜபக்சே ஆதரவாளர்களில் ஒருவர், சபாநாயகர் ஜெயசூரியாவை இருக்கையிலிருந்து எழுப்பி, அதில் ராஜபக்சே ஆதரவு எம்.பி., ஒருவர் அமர்ந்தார். அடுத்த சில நிமிடங்களில், சபாநாயகர் இருக்கையை சிலர், அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

இதனால், சபாநாயகர் ஜெயசூரியா நின்றபடி பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையே, ராஜபக்சே ஆதரவு, எம்.பி.,க்கள், ரணில் ஆதரவாளர்கள் மீது, மிளகாய் பொடியை துாவி, தாக்குதல் நடத்தினர். இது, சபையில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, சபை காவலர்களை அழைத்த ஜெயசூரியா, ரகளையில் ஈடுபட்ட எம்.பி.,க்களை வெளியேற்றும் படி உத்தரவிட்டார்.  இதனால் வரும் வாரத்துக்கு சபையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

இயற்கை சூரியனை விட வெப்பமுடைய செயற்கை சூரியனை உருவாக்கிய சீனா

நம்முடைய வானத்திலுள்ள சூரியனின் வெப்பநிலை 15 மில்லியன் டிகிரி செல்ஷியஸ் மட்டுமே கொண்டதாகும். இந்த உண்மையே ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்க, இந்த வெப்பநிலை, அணு ஆற்றல் ஆய்வாளர்களுக்கு இன்னொரு முக்கிய விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது பூமியில் அணுக்கரு இணைப்பை ஏற்படுத்த குறைந்தபட்சம் 100 மில்லியன் டிகிரி வெப்பம் தேவை என்பதுதான் அது. இன்றைய தேதியில் மிகச் சிறந்த அணுக்கரு இணைப்பு பரிசோதனைக்கு வழங்கப்பட்டுள்ள பெயர் செயற்கை சூரியன் என்பதாகும்.

ஆற்றலை உருவாக்க நமது சூரியன் பயன்படுத்தும் அதே செயல்பாட்டை உருவாக்க ஆய்வாளர்கள் இந்த அணுக்கரு உலையை உருவாக்கினார்கள். இந்த அணுக்கரு உலை, அணுக்கருப்பிளப்பின்போது வெளியாகும் வெப்பத்தை தாங்கும் விதத்திலான சுவர்களைக் கொண்டுள்ளது. அணுக்கரு இணைப்பில் ஒரே ஒரு பிரச்சினைதான் உள்ளது. அது எவ்வளவு நேரம் அணுக்கரு இணைப்பை நீடிக்கச் செய்ய முடியும் என்பதுதான்.

இதற்குமுன் அதிக நேரம் நீடித்த அணுக்கரு இணைப்பு வேதிவினை, பிரான்சில் உள்ள அணு உலை ஒன்றில் நிகழ்த்தப்பட்டது, 2003-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அந்த நிகழ்வு 6 நிமிடங்கள் 30 விநாடிகள் நீடித்தது. இந்த ஆய்வுகள் வெற்றி பெற்றால் இன்னும் சில ஆண்டுகளில் ஒரு செயற்கை சூரியன், நம் வீடுகளில் இரவையும் பகலாக்கும் வண்ணம் பிரகாசிக்கலாம்.

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.