ஜி20 மாநாட்டில் மோடி, ட்ரம்ப் மற்றும் அபே சந்திப்பு 

  Newstm Desk   | Last Modified : 29 Nov, 2018 12:43 pm
donald-trump-to-hold

அர்ஜென்டினாவில் நடக்கும் ஜி-20 உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே ஆகியோர் ஒன்றாக சந்தித்து பேச உள்ளனர். 

பொருளாதார நாடுகள் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவற்றை கொண்ட ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு, அர்ஜென்டினா நாட்டின் தலைநகரமான பியுனோஸ் அயர்ஸ் நகரில் நாளை (30-ம் தேதி) தொடங்குகிறது. டிசம்பர் 1-ம் தேதி நிறைவு பெறுகிறது. 

இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா உள்ளிட்ட 19 தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். மாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று பியுனோஸ் அயர்ஸ் புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிடுகையில், ''உலகளவில் முன்னணியில் உள்ள பொருளாதார நாடுகள் இடையே நல்லதொரு ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு ஜி-20 மிகச்சிறப்பான முயற்சியை எடுத்துள்ளது. உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கும், வளத்திற்கும் இந்தியா முக்கிய பங்களிப்பு செய்துள்ளது. நியாயமான, நிலையான வளர்ச்சிக்கு ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த உச்சி மாநாட்டின் மையப்பொருளாக உள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு உச்சி மாநாடு, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமெரிக்கா முன்னெடுத்து வரும் வர்த்தகப்போர், தென் சீனக்கடல் விவகாரத்தில் முரணாக நிற்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் ஒன்றாக சந்திப்பது முக்கிய அம்சமாகும். 

ட்ரம்ப் - புடின் சந்திப்பு இல்லை 

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது அமெரிக்கா. இந்த நிலையில் அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினை ட்ரம்ப் சந்திக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு வாய்ப்பு இல்லை என வெள்ளை மாளிகை வட்டாரத் தகவல் வெளியாகியுள்ளது. 

அதேபோல, மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு நடத்துகிறார். இதனை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் உறுதி செய்துள்ளார்.

''ஜப்பான் பிரதமர் அபேயை ட்ரம்ப் சந்தித்து பேசுகிறார். பின்னர் இவ்விரு தலைவர்களும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கூட்டாக சந்திக்கிறார்கள்” என்று கூறினார்.

பிரதமர் மோடியும், அமெரிக்க ட்ரம்பும் தனியாக சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்படவில்லை. இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே கூறும்போது, ''பல்வேறு இரு தரப்பு சந்திப்புகளுக்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இரு தரப்பு தலைவர்களின் சந்திப்பு, அவர்களின் நேர அட்டவணை அமைவதைப் பொறுத்துத்தான் அமையும்'' என குறிப்பிட்டார்.

இருப்பினும் சீன அதிபர் ஜின் பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கடந்த 7 மாதங்களில் இவ்விரு தலைவர்களும் சந்தித்து பேசுவது 4-வது முறை ஆகும்.

இவர்களைத் தவிர ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், அர்ஜென்டினா அதிபர் மொரிசியோ மேக்ரி, சிலி அதிபர் செபாஸ்டியன் பினரா, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகிய தலைவர்களையும் மோடி சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close