வீக்லி நியூஸுலகம்: செவ்வாய் கிரகத்துக்கு போவதில் போட்டாப் போட்டி மற்றும் சவுதிக்கு செனட் சபை வைக்கும் 'செக்'

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 01:58 pm

interesting-world-news-happenings-around-the-world

இங்கிலாந்தில் கட்டப்படும் 'ரெடிமேட்' வீடுகள்

இங்கிலாந்தில் உடனடியாக கட்டப்படும் ரெடிமேட் வீடுகள் மீது மக்களின் ஆர்வம் உயர்ந்துள்ளது. ஏற்கனவே செய்து தயாராக உள்ள வீடுகளை நாம் விரும்பும் இடத்திற்கு வந்து ஒட்டித் தரும் கலாச்சாரம் புதிதாக பரவி வருகிறது. இங்கிலாந்தின் யார்க்சையர் பகுதியில் 3 படுக்கை அறைகள் கொண்ட வீடுகள் இந்திய மதிப்பில் 45 லட்சம் ரூபாய் முதல் 70 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது.

ஏற்கனவே தயாராக உள்ள வீட்டுப் பகுதிகள் கிரேன் மூலம் கொண்டு வரப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக ஒட்டப்படுகிறது. இவ்வாறு ஒரு வீடு முழுமையாகக் கட்டப்படுவதற்கு 36 மணி நேரங்களே ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்துக்கு முதலில் செல்வது யார்?- நீயா? நானா? ஆரம்பம்

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும்  முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். இந்த பணிகளில் ஒத்துழைப்பு அளிப்பதாக இந்தியாவின் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தொழிலதிபர்கள் இருவரும் டுவிட்டர் பக்கத்தில் செவ்வாய்க்கு யாரை அனுப்புவது என்பது தொடர்பாக விவாதத்தில் ஈடுபட்டனர். கவிஞர்களை தான் முதலில் அனுப்ப வேண்டுமென ஆனந்த் மகேந்திரா தமது டுவிட்டரின் பதிவிட, பொறியாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளை அனுப்ப வேண்டுமென எலான் மஸ்க் பதிலிட்டார். அவர்களால் தான் புதிய கட்டமைப்புகளை உருவாக்க முடியுமென அவர் குறிப்பிட்டார். ஆனால் கவிஞர்களை தான் முதலில் அனுப்ப வேண்டுமென்றும், கவிஞர்களை தவிர மற்றவர்கள் முதலில் செல்வதில் அர்த்தமில்லை என்றும் ஆனந்த் தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.

ஏமன் போரில் சௌதிக்கு வழங்கும் ஆதரவை திரும்ப பெற அமெரிக்க செனட் நடவடிக்கை

ஏமனில், சவுதி அரேபியாவின் தலைமையில் நடைபெற்று வருகின்ற போருக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவை திரும்ப பெறுவதற்கான முயற்சி ஒன்றை அமெரிக்க செனட் அவை முன்னெடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு பலத்த அடியாக இந்த முயற்சி பார்க்கப்படுகிறது. சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை பற்றி ட்ரம்ப் தெரிவித்த கருத்துகளை பல அமெரிக்க செனட் அவை உறுப்பினர்கள் விரும்பவில்லை. ஏமனின் நிலைமையை மிகவும் மோசமாக்கும் என்பதால், இந்த மசோதாவுக்கு செனட் அவை உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என்று வெளியுறவு செயலாளர் மைக் பாம்பேயோவும், பாதுகாப்புத்துறை செயலாளர் ஜிம் மேத்திஸும் வலியுறுத்தியுள்ளனர்.

இருப்பினும், இருகட்சிகளும் கொண்டு வரும் முன்மொழிவாக இதனை எடுத்து செல்ல செனட் அவை உறுப்பினர்கள் பெருமளவு இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 

6 அடி உயரத்தில் பசு!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பசு மாடு ஒன்று சுமார் 6 அடி உயரம் வரை வளர்ந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பசு ஒன்று சுமார் 6 அடி உயரம் வளர்ந்துள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பசுவிற்கு அதன் உரிமையாளர் “கினிக்கர்ஸ்” என பெயரிட்டுள்ளார்.

பசுவின் இந்த வளர்ச்சி அதன் வாழ்நாளையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக இத்தாலியை சேர்ந்த பசு ஒன்று சுமார் 6.4 அடி உயரம் வரை வளர்ந்திருந்தது. அந்த புகைப்படமும் முன்னதாக வைரலாகியது. அதன் பின் உலகில் உயரமான பசு இது தான் என கூறப்படுகிறது.

இந்த பசுவின் விலை ஆஸ்திரேலிய டாலர் படி 396 டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் ரூ.20 ஆயிரம் ஆகும். 

இந்தோனேசிய விமானத்தின் ‘பிளாக் பாக்ஸ்’ தகவல் வெளியானது

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா நகரில் இருந்து பங்கல் பினாங் நகருக்கு லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஜேடி610 என்ற விமானம் கடந்த அக்டோபர் 29-ம் தேதி காலை புறப்பட்டது. இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 8 வகையைச் சேர்ந்தது. விமானத்தில் மொத்தம் 188 பேர் பயணித்த நிலையில், விமானம் புறப்பட்ட 13 நிமிடங்களில் தகவல் தொடர்பை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக இந்தோனேசிய அரசு அறிவித்தது.

 

நீண்ட தேடுதலுக்குப்பின் விமானத்தின் பிளாக் பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதை ஆய்வு செய்த அதிகாரிகள் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பது குறித்த தகவலை வெளியிட்டு, அதன் முதல்கட்ட அறிக்கையை இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையில், “விமானத்தில் இருந்த தானியங்கி பாதுகாப்பு முறை செயலிழந்து விமானத்தின் மூக்குப்பகுதியை கீழ்நோக்கி இழுத்துள்ளது. விமானத்தின் கேப்டன் விமானத்தைப் பல முறை மேல்நோக்கி தூக்கிப் பறக்க முயற்சித்தும் விமானத்தின் மூக்குப்பகுதி கீழ்நோக்கியே சரிந்துள்ளது. இதனால், கேப்டனின் கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.