சோமாலியா நாட்டின் அதிபர் மாளிகைக்கு அருகே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்களில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு அந்நாட்டை சேர்ந்த அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு காரணம் என தெரியவந்துள்ளது.
சோமாலியா நாட்டின் தலைநகர் மோகதிஷுவில், அதிபர் மாளிகைக்கு அருகே இன்று பயங்கர சத்தத்துடன் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இரண்டு கார்களில் வந்த தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள், பயங்கர சத்தத்துடன் மிகப்பெரிய அளவில் குண்டு வெடித்ததாக தெரிவித்துள்ளனர். "பயங்கர சத்தத்துடன் கார் வெடிகுண்டுகள் வெடித்தன. எத்தனை பேர் இறந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், பலர் இறந்ததாக கூறுகின்றனர்" என அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதலுக்கு சோமாலியாவை சேர்ந்த அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
newstm.in