குல்பூஷண் ஜாதவ் : மார்ச் 2016 - ஜூலை 2019...

  கிரிதரன்   | Last Modified : 17 Jul, 2019 07:07 pm
kulbhushan-jadhav-case-time-line

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணத்துக்காக அவரை கைது செய்வதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியிருந்தது. மேலும், கடந்த 2016 மார்ச்  3 - ஆம் தேதி, பலுசிஸ்தான் மாகாணத்தில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், குல்பூஷணுக்கு மரண தண்டனை விதித்து, 2017 ஏப்ரல் 10 -ஆம் தேதி உத்தரவிட்டது.

சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த தீர்ப்பை எதிர்த்து,  நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீடு செய்தது.  49 வயதான குல்பூஷண் ஜாதவ், பலுசிஸ்தானில் கைது செய்யப்படவில்லை என்றும், ஈரானுக்கு அவர் வர்த்தகரீதியான பயணத்தை மேற்கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் ராணுவம் அவரை அங்கிருந்து கடத்தியுள்ளது எனவும் தமது மேல்முறையீட்டு மனுவில் இந்தியா தெரிவித்திருந்தது.

அத்துடன், அவர் ஒன்றும் "ரா" போன்ற இந்தியாவின் உளவு அமைப்பை சேர்ந்தவர் இல்லையென்றும், தமது சார்பில் வாதாட வழக்கறிஞரை நியமித்து கொள்ள ஜாதவுக்கு அனுமதி அளிக்காதது என்பன உள்ளிட்ட சர்வதேச சட்ட விதிமுறைகளை இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அப்பட்டமாக மீறியுள்ளது எனவும் சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா ஆணித்தரமாக தெரிவித்திருந்தது.

இதையடுத்து, குல்பூஷண்  ஜாதவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்து, 2017 மே மாதம் 18 -ஆம் தேதி, சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து அங்கு இவ்வழக்கின் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்,  கடந்த ஆண்டு, பிப்ரவரி 18 -21 -ஆம் தேதி வரை, நான்கு நாட்களுக்கு இருதரப்பு வாதங்கள் நடைபெற்று முடிந்தன.

அப்போது, 10 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு வாதாடிய குல்பூஷண் ஜாதவ் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஹரீஸ் சால்வே, "குல்பூஷண் ஜாதவ் அளித்துள்ள வாக்குமூலம் திரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவருக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது" என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்திருந்த மரண தண்டனையை நிறுத்திவைத்து, சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close