வட கொரியா அணு ஆயுத சோதனையை தவிர்ப்பதின் உண்மைப் பின்னணி!

  Padmapriya   | Last Modified : 26 Apr, 2018 01:53 pm

வட கொரியாவின் மிகப் பெரிய அணு ஆயுத சோதனை தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக, அந்தத் தளம் மிகப் பெரிய அளவில் சேதமடைந்துள்ளதாக சீனா கவலை தெரிவித்துள்ளது. மேலும், அந்த தளத்தை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வட கொரியாவில் பூங்கேரியில் அணு ஆயுத பரிசோதனை தளம் அமைந்துள்ளது. இங்குதான் கடந்த 2006-ம் ஆண்டிலிருந்து 6 அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டன. அணு ஆயுத சோதனை நடத்திய வட கொரியாவுக்கு உலகம் முழுவதும் இருந்து கண்டனமும் பொருளாதார தடையும்தான் பரிசாக கிடைத்தன. ஆனாலும், எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் தொடர்ந்து அணு ஆயுத சோதனை, கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்த நடத்தி வந்தது.

இந்த அணு ஆயுத சோதனை தளமானது, வடகொரியாவின் மாண்டாப் மலைப்பகுதிக்கு அடியில் குகை அமைத்து உருவாக்கப்பட்டது. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வுகளால் மலையின் உள்பகுதி சேதமடைந்து விபத்து ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சேதம் கடுமையாக இருப்பதால், எந்தவித அணு சோதனைகளுக்கும் மாண்டாப் மலைப்பகுதியை பயன்படுத்தக்கூடாது என்றும் சீன நிறுவன ஆய்வு எச்சரிக்கிறது. அதில் கதிரியக்க பொருட்களின் கசிவு பெரிய அளவில் வெளியேறும் அபாயம் இருப்பதால், அதனைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் சோதனைக்குப் பிறகே மாண்டாப் மலைப்பகுதியின் டனல் சேதமடைந்திருக்கலாம் என சீன விஞ்ஞானிகள் ஏற்கெனவே கவலை தெரிவித்திருந்தனர். இதனை அடுத்தடுத்த நில அதிர்வுகள் மோசமான நிலைக்கு இட்டுச் சென்றிருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது. எனினும் இது குறித்த தகவல்கள் எதையும் வட கொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிடவில்லை.

முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தி வைப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதற்கு இந்த விபத்துதான் காரணமாக இருக்கும் என்று தற்போது தெரியவந்துள்ளது.

அதானே, கிம் ஜாங் உன்னாவது, அணு ஆயுதத்தை கைவிடுவதாவது... இதுபோன்ற விபத்து, இயற்கை பேரிடர் என ஏதாவது நிகழ்ந்தால்தான் கிம்மை கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் வட கொரியாவை தொடர்ந்து கண்காணித்து வரும் போர் கண்காணிப்பாளர்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close