இரண்டு கொரியாக்கள் கைகோர்த்த சரித்திர சந்திப்பு!

  Padmapriya   | Last Modified : 27 Apr, 2018 08:59 pm

கொரிய நாடுகளை முழுவதும் அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற இரு நாட்டு அதிபர்களும் கூட்டாக சூளுரைத்ததாக தெரிவிக்கப்பட்டது. உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பில், ஓர் ஆண்டுக்குள் முற்றிலும் அணுஆயுத பயன்பாட்டை ஒழிப்பதாக இரு நாட்டு அதிபர்களும் முடிவெடுத்தனர்.

எல்லைகளைத் தாண்டி சந்தித்த அதிபர்கள் 1950-1953 ஆண்டுகளில் நடந்த கொரிய போருக்கு பிறகு வடகொரியா, தென்கொரியா நாட்டு அதிபர்கள் இருவரும் மோதல் போக்கையே கடைபிடித்துவந்தனர். இன்று இரு நாட்டுத் தலைவர்களும் எல்லையை கடந்து சந்தித்து கொண்ட வரலாற்று நிகழ்வு நடந்துள்ளது. கொரிய தீபகற்பத்தை பிரிக்கும் ராணுவ எல்லைகளை கடந்து முதல் முறையாக தென் கொரியாவில் கால் பதிக்கும் வடகொரிய தலைவர் என்ற பெயரை பெறுகிறார் கிம் ஜாங்-உன். இன்று காலை தென் கொரிய அதிபர் முன் ஜே-இன் உடன் பேச்சு நடத்த கிம் ஜாங்-உன் தென் கொரிய எல்லைக்குள் வந்தார்.

வட கொரியாவின் இணக்கம் ஏன்? 2006-ஆம் ஆண்டிலிருந்து வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டது. ஐ.நா. சபையும் அமெரிக்காவும் அதன் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. இதனால் வட கொரியா மேலும் மோதல் போக்கையே கடைபிடித்தது. ஆனால், திடீர் திருப்பமாக தென்கொரியாவின் முயற்சி மற்றும் அழைப்பை பரிசீலித்தது. குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்திய தென்கொரியா அதில் வடகொரியாவை அழைத்தது. பின் தென்கொரிய பிரதிநிதிகள் வடகொரியாவுக்கு அதிபர் கிம் ஜோங் உன்னை சந்தித்து பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது (இன்று) ஏப்ரல் 27-ம் தேதி இருநாடுகளின் உச்சி மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது. இது அமெரிக்காவையும் வடகொரியாவையும் தோழமை நாடுகளாக்கும் முதல் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

அமைதி கிராமத்தில் ஏற்பாடு இரு நாட்டு எல்லையில் உள்ள அமைதி கிராமமான பான்முன்ஜியோமில் இன்று உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்க வரும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் முறையாக வரவேற்றார். இருவரும் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். இந்த சந்திப்பை பதிவு செய்ய ஆயிரக்கணக்கான செய்தியாளர்கள் அங்கு குழுமி இருந்தனர். பொதுவாக கொரிய நாடுகளில் ஊடக கட்டுப்பாடு அதிக அளவில் உண்டு. எப்போதும் அவர்களது செய்திகளை உள்நாட்டு அரசு செய்தி நிறுவனம் மட்டுமே வெளியிடும். மற்றபடி, பலூனை பறக்கவிட்டு ஒருவரை ஒருவர் வசைப்பாடுவதும். துண்டு பிரசுரம் மூலம் கண்டித்துக் கொள்வதும் தான் இரு நாட்டு செய்தித் தொடர்பு.

உச்சி மாநாட்டின் நினைவாக பான்முன்ஜியோம் அமைதி கிராமத்தில் இரு நாட்டுத் தலைவர்களாலும் மரம் நடப்பட்டது. இதற்காக இருநாடுகளில் இருந்து மண், தண்ணீர் எடுத்து வரப்பட்டது. மரக்கன்றை நட்டபின் கிம் மற்றும் முன் காவலர்கள் இன்றி சிறிது தூரம் நடந்து சென்றனர். அப்போது அவர்கள் பேசியது பதிவு செய்யபடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் 'புதிய வசந்தம்' வந்துள்ளதாக கிம் ஜாங்-உன் புன்னகைத்து செய்தியாளர்களிடம் கூறினார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மனைவியும் இன்று இரவு தென் கொரிய அரசு அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரோடு தென் கொரிய அதிபரின் மனைவி கிம் ஜாங் சூக்கும் பங்கேற்பதாக கூறப்பட்டுள்ளது.

தென் கொரியாவை நாடாக அங்கிகரித்த வட கொரியா வட கொரிய தொலைக்காட்சியில், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னை அதிபர் என்று குறிப்பிட்டதாக அங்கிருந்த செய்திகள் கூறுகின்றன. வழக்கமாக தென் கொரியாவை அவர்களது ஊடகம் தனி நாடாக குறிப்பிடாது. "கொரியாவின் தெற்கு பகுதி" என்றே வட கொரியா குறிப்பிடும்.

ஆலோசனை இந்த சந்திப்பில் அணு ஆயுத குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் மேலும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வடகொரியா அணு ஆயுத பயன்பாட்டை கைவிடுவது, கொரிய தீபகற்பத்தில் நிரந்திர அமைதி நிலைநாட்ட செய்வது, கொரிய நாடுகளுக்கு இடையே நல்லுறவு பேண வகை செய்வது ஆகியவை குறித்து இரண்டு தலைவர்களும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தென் கொரிய அதிபரின் செய்தி தொடர்பாளர் யூ யங்-சான் தெரிவித்துள்ளார்.

பாராட்டிய சீன ஊடகங்கள் கொரிய நாடுகள் குறித்த நிகழ்வுகளை சீன ஊடகங்கள் வழக்கமாக விமர்சித்தே எழுதும். ஆனால், சீனாவும் இந்த சந்திப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. வட கொரிய செய்திகளை சீன அரசு ஊடகம் லீக் செய்யும். ஆனால் இம்முறை இதனை நேர்மறையாக செய்தியை ஒளிபரப்பி வருகிறது. இரு தலைவர்களும் "பதற்றமற்று" காணப்பட்டதாக சீன தொலைக்காட்சி ஒன்று வர்ணித்தது. இருவரும் கைக்குலுக்கி பேசியது" வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு" என சீன செய்தித்தாள் விவரித்துள்ளது.

படங்கள் அனைத்தையும் INTER-KOREAN SUMMIT PRESS CORPS வெளியிட்டுள்ளது. ஆக்கம்: தி நியூயார்க் டைம்ஸ்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.