நிதி மோசடி செய்தவருக்கு 13,275 ஆண்டுகள் சிறை

  Anish Anto   | Last Modified : 30 Dec, 2017 12:05 pm

தாய்லாந்து நாட்டில் நிதி மோசடி செய்த நபர் ஒருவருக்கு 13,275 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தாய்லாந்தை சேர்ந்த ப்ஹுடிட்(34) எனும் நபர் தி சிஸ்டம் பிளக் அண்ட் பிளே மற்றும் தி இன்னோவேஷன் ஹோல்டிங்ஸ் எனும் இரண்டு தனியார் நிறுவனங்களை நடத்தி வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2016, செப்டம்பர் மாதம் வரை மக்களிடம் போலியான வாக்குறுதிகளை அளித்து தனது நிறுவனத்தில் அவர்களை முதலீடு செய்ய கூறியுள்ளார். வார லாபம் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்து விடும் போது கூடுதலாக 5% பணம் என மக்களின் மனதில் ஆசையை தூண்டி அவர்களை முதலீடு செய்ய வைத்துள்ளார்.

சுமார் 40,000 பேர் இதனை நம்பி அவரின் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். 1,028 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு குவிந்துள்ளது. ஆனால் சொன்னபடி பணத்தை கொடுக்காமல் முதலீட்டாளர்களை ஏமாற்றி உள்ளார். மேலும், முதலீடு செய்யப்பட்ட பணத்தை முறைகேடாக வட்டிக்கு விட்டுள்ளார். இவரது முறைகேடுகள் வெளியில் தெரிய வந்ததை அடுத்து இவரை தாய்லாந்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ப்ஹுடிட் தங்களை மோசடி செய்து விட்டதாக 2,653 பேர் தனி தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற இந்த வழக்கு மீதான விசாரணையின் போது, ப்ஹுடிட் மீது முறைகேடாக பணம் கடன் வழங்கியது மற்றும் 2,653 முதலீட்டாளர்கள் அளித்த புகார் தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மை என உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து ஒவ்வொரு குற்றச் சாட்டுக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற வீதத்தில் மொத்தம் 13,275 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை ப்ஹுடிட் ஒப்புக் கொண்டதால் தண்டனை அளவு பாதியாக குறைக்கப்பட்டு 6,637 ஆண்டுகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், வழக்கு தொடர்ந்த 2,653 பேருக்கும் ஆண்டுக்கு 7.5% வட்டியில் 108 கோடி ரூபாயை திருப்பி அளிக்க வேண்டும் என்றும், மேலும் ப்ஹுடிட்டின் இரண்டு நிறுவனங்களும் தலா 128 கோடி ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தண்டனை ஆண்டுகள் எவ்வளவு காலமாக இருந்தாலும் தாய்லாந்து நாட்டில் ஒரு நபரை அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை மட்டுமே சிறையில் அடைக்க முடியும். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.