துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டதா மாயமான மலேசிய விமானம்? அதிர்ச்சி தகவல்

  PADMA PRIYA   | Last Modified : 20 Mar, 2018 05:28 pm

2014ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி, 239 பயணிகளுடன் சீன தலைநகர் பீஜிங் சென்ற மலேசிய விமானம் காணாமல் போனது. இன்று வரை அந்த விமானம் என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்தநிலையில், மாயமான மலேசிய விமானம் துப்பாக்கி புல்லட்டால் துளைக்கப்பட்டதாகவும், அது விழுந்த இடத்தில் தேடலே நடக்கவில்லை என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர்.

239 பயணிகளுடன் மாயமான எம்.எச்.370 மலேசிய விமானத்தை தேடும் பணி 2014 முதல் நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த பணி முடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தேடுதல் குழுவினருக்கு விமானத்தின் சிறு துண்டு கூட கிடைக்கவில்லை, இதனால் வெறுப்பும் வியர்த்தமுமே எஞ்சிய நிலையில் தேடுதல் பணி அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது. இந்தநிலையில்தான், ஆஸ்திரேலியாவை சேர்ந்த 64 வயதாகும் மெக்கானிக்கல் இன்ஜினியரான பீட்டர் மக்மென் என்பவர், மலேசிய விமானத்தின் பாகங்களை கூகுள் எர்த் மூலம் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கூகுள் எர்த் மூலம் தகவல்: இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " விமானம் இருக்கும் இடம் மொரிஷியஸ் தீவுகளில் இருந்து 22.5 கிமீட்டர் தொலைவில் 16 கி.மீ தெற்கில் உள்ள ரவுண்ட் தீவை காட்டுகிறது. இந்தத் தீவில் இதுவரை விமானம் மாயமானது குறித்து தேடுதல் நடத்தப்படவில்லை. அதோடு, அமெரிக்கா அதிகாரிகள் சரியான தேடுதல் வேட்டையை நடத்தவில்லை, இந்த பகுதியில் தேடுதல் நடத்தவும் அவர்கள் மறுத்துவிட்டனர்" என்று கூறியுள்ளார்.

குண்டுகள் துளைக்கப்பட்டதா? தேடுதல் பணிக்கு அனுப்பட்ட அமெரிக்க அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை. மாயமான விமானம் முற்றிலும் குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தது. விமானம் புறப்பட்ட 6 மணி நேரத்திற்கு பிறகு இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதை ஆஸ்திரேலியா மறுத்துள்ளது. பீட்டர் மென்மென் வெளியிட்ட படத்தில் உள்ள உருவம், விமான விபத்து நடைபெறுவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கூகுள் எர்த் படத்திலும் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

தேடல் கைவிடப்பட்டது கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்றபோது விமானம் காணாமல் போனதால் அந்த பாதையில் தேடுதல் நடத்தப்பட்டது. மலேசியாவுக்கும் வியட்நாமுக்கும் இடைபட்ட கடல் பகுதியில் விழுந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், விமானம் பாதை மாறி இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு வந்ததாகவும், ரேடாரில் இந்த விவரம் பதிவானதாகவும் சில நாடுகள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, தேடுதல் பணியானது இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு மாறியது. தீவிர தேடுதலுக்குப் பிறகு தேடுதல் கைவிடப்பட்டுள்ளது.

புதிரான விமானத்தின் கதி: இந்தியப் பெருங்கடலில் சுமார் 1,20,000 சதுரகிலோமீட்டர் பரப்பில் தேடுதல் வேட்டையை மேற்கொண்டது ஆஸ்திரேலியாவின் இணை ஒருங்கிணைப்பு மையம். ஆஸ்திரேலியாவுக்கு மேற்கே ஆழ்கடலில் 160 மில்லியன் டாலர்கள் செலவின தேடுதல் பணியை இந்த முகமைதான் தலைமையேற்று நடத்தியது. இந்த தேடுதல் பணியை கைவிடுவது குறித்து அந்த அமைப்பு கூறுகையில், “எல்லாவிதமான உயர் தொழில்நுட்ப, அறிவியல் சாதனங்களை பயன்படுத்தி விமானத்தை தேடும் பணியை மேற்கொண்டோம். இதற்காக, இந்தத் துறையின் அசைக்க முடியா நிபுணர்களின் உதவியையும் பெற்றோம். ஆனாலும் விமானம் பற்றி கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே கடலடி தேடல் வேட்டை முடித்துக்கொள்ள முடிவு செய்தோம். இந்தக் கைவிடல் முடிவு எளிதாகவோ, வருத்தமின்றியோ எடுக்கப்பட்டதல்ல” என்றது.

அதேநேரத்தில், மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா நாட்டு அமைச்சர்களும், தேடுதல் குழுவினரை பாராட்டியுள்ளனர். “விமானம் பற்றிய புதிய தகவல் எதிர்காலத்தில் கிடைக்கும் என்று உறுதியான நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம், அப்போது நிச்சயம் விமானத்தின் புதிர் அவிழ்க்கப்படும்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.