ஜப்பானில் பாதுகாவலரைத் தாக்கிக் கொன்ற வெள்ளைப் புலி

  Padmapriya   | Last Modified : 10 Oct, 2018 02:15 pm

zookeeper-in-japan-mauled-to-death-by-rare-white-tiger

ஜப்பானின் தென்பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்த வெள்ளைப் புலி ஒன்று தன்னை பராமரித்து வந்த ஊழியரை கொடூரமாக கடித்துக் குதறிக் கொன்றுள்ளது. 

ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் ககோஷிமா நகரம் உள்ளது. இங்கு உள்ள ஹிரகவா உயிரியல் பூங்காவில் மிகவும் அரிதான வகையிலான  4 வெள்ளைப் புலிகள் உள்ளன.

இந்த நிலையில், அந்தப் புலிகளில் ஒன்று, தன்னை பராமரித்து வந்த ஊழியரை கழுத்தில் கடித்துக் குதறி விட்டது.  அவரது அலறலைத் தொடர்ந்து உடனடியாக அங்கு விரைந்து வந்த பிற ஊழியர்கள், ரத்த வெள்ளத்தில் மிதந்தவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தனர்.  ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த வெள்ளைப்புலிக்கு மயக்க மருந்து கொடுத்து வன அதிகாரிகள் மயங்க வைத்தனர். அதன்பின்னர் இந்தச் சம்பவம் குறித்து பூங்காவிற்கு வந்து போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டனர். 

பலியான ஊழியரின் பெயர் ஃபுருஷோ என்றும் அவரது வயது 40 எனவும் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர். புலியை பார்வையாளர்கள் வந்து பார்ப்பதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருந்த கூண்டிலிருந்து, இரவு நேர கூண்டிற்கு மாற்ற முயற்சித்தபோது இந்த அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என்று பூங்கா ஊழியர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தை நேரில் எவரும் பார்க்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பாக இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் ஷயர் உயிரியல் பூங்கா பணியாளர் ஒருவரை புலி ஒன்று இதே போல கடித்துக்கொன்றது. ரஷியாவிலும் காலினின்கிராட் நகரில் உள்ள பூங்காவில் புலி தாக்கி பணியாளர் ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். 

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.