பதற்றத்தின் நடுவே இன்று ஆப்கான் தேர்தல்: தொடரும் தாலிபான் அட்டகாசம்

  Padmapriya   | Last Modified : 20 Oct, 2018 08:11 am

afghanistan-delays-election-in-kandahar-after-attack-that-killed-police-chief

ஆப்கானிஸ்தானில் ஏற்கெனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடக்க உள்ளது. 

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 249 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடும் நெருக்கடி சூழல்களுக்கு இடையே இன்று (20-ம் தேதி) நடைபெறுகிறது. இதில் 2500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பெண் வேட்பாளர்களுக்கு கணிசமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.  இந்த தேர்தலில் சுமார் 89 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர். தேர்தலுக்காக 5 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தலை முதலிலிருந்தே புறக்கணிக்க வேண்டும் என மக்களுக்கு கேடு விடுத்துவரும் தாலிபான் பயங்கரவாதிகள், தொடர்ந்து பல பகுதிகளில் தாக்குதல் சம்பவங்களை வெறித் தனமாக நிகழ்த்தி வருகின்றனர். 

பல்வேறு முறை தேர்தல் பிரச்சார பேரணிகளில் புகுந்து கண்மூடித்தனமான தாக்குதல்களை இவர்கள் நிகழ்த்தியுள்ளனர். முக்கியமாக இந்தத் தாக்குதல்கள் பொதுமக்களை பெரிதும் அச்சுறுத்தும் வகையில் வேட்பாளர்களை குறிவைத்து நடத்தப்படுகிறது. கடந்த 2 வாரங்களில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் இதுவரை 10க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளனர் 

கந்தஹாரில் தேர்தல் ஒத்திவைப்பு 

இந்த நிலையில், தாலிபான்களின் கோட்டை என்று கருதப்படும் கந்தஹார் மாகாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கந்தஹார் மாகாணத்தின் காவல்துறை தலைவர் ஜெனரல் அப்துல் ரசிக், உளவுத்துறை தலைவர் மற்றும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர். ஆளுநர் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.

காவல்துறை தலைவர் ஜெனரல் அப்துல் ரசிக், சக பாதுகாவலராக நின்றுகொண்டிருந்த ஒருவராலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் காந்தஹார் மாகாணத்தைத் தாண்டி செல்வாக்கு பெற்றிருந்தவர். கடந்த சில வருடங்களாக அவர் ஆப்கானிஸ்தானின் வலிமை வாய்ந்த பாதுகாப்பு படை மற்றும் அரசியல் பிரபலமாக உருவாகி வந்தவர். தாலிபான்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த இவரை கொல்ல 20 முறை முயற்சி நடந்தது. 

படத்தில் நடுவே நிற்பவர் ஜெனரல் அப்துல் ரசிக்

துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது அமெரிக்க படைத்தளபதி ஸ்காட் மில்லர், கவச உடை அணிந்திருந்ததால்தான் தப்பினார் என தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கெனவே தாலிபான்களின் கோட்டையான கந்தகாரில் நடந்த இந்தத் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு மிகப்பெரிய வெற்றி என்றும், ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு பலத்த அடி என்றும் கருதப்படுகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. எச்சரிக்கையாக கந்தகாரில் மறுதேதி அறிவிக்கப்படாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடந்து வருகிற உள்நாட்டுப்போரில், பாதுகாப்பு படையினரை குறி வைத்து நடந்த இந்த தாக்குதல் மிகப்பெரிய தாக்குதல் என கூறப்படுகிறது.

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.