இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது - இரா.சம்பந்தன்

  Shanthini   | Last Modified : 03 Jan, 2018 11:14 pm


ஐ.நா சபையில் இலங்கை அரசாங்கம் அளித்த உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதனால் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 2009ம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் போது ராணுவத்தினர், மனித உரிமை மீறல்களிலும் போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டது குறித்து ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதங்கள் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் நடைபெற்று வருகின்றது. இதில் இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து உள்நாட்டு விசாரணையை நடத்தி தீர்வு காண்பதாக இலங்கை அரசாங்கம் ஐநா சபையில் உறுதி அளித்துள்ளது. ஆனால் இது வரையில் அந்த உறுதி மொழிகளை நிறைவேற்றவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன்,

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சாதகமான அரசியல் தீர்வொன்றை கொண்டு வர, கடந்த 2016ம் ஆண்டு அரசியலமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்காக நியமிக்கப்பட்ட பிரதமர் தலைமையிலான 21 பேர் அடங்கிய வழிநடத்தல் குழு, தொடர்ச்சியான சந்திப்புக்களை மேற்கொண்டு தமது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த நிலையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர் அரசியலமைப்பு பணிகள் மிக விரைவாக முன்னெடுக்கப்படும் என நம்புகிறேன். 

படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்பான கேள்விகளும் உள்ளன. இவை எதுவும் செய்யப்படவில்லை என நான் கூறவில்லை. ஆனால், இன்னும் அதிகமாக செய்யப்பட வேண்டும். 

சிறை வைக்கப்பட்டிருந்த சுமார் 40 முதல் 50 சதவீதமானோர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக சுமார் 20,000 புகார்கள் உள்ளன. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் குறித்த தகவல்களே அவர்களின் குடும்பங்களின் அடிப்படை தேவையாக உள்ளது. 

இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள்  சபையில் 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஏற்ப இலங்கை அரசாங்கம் தமது உறுதிமொழிகளை  இன்னும் நிறைவேற்றவில்லை. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளார்.

2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதில் நாங்கள் சரியான முடிவை எடுத்திருந்தோம் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கும் எண்ணத்தை  முன்னரே ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன   கொண்டிருந்தார், என்றார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.