வாளுடன் பத்திரிகையாளர் சந்திப்பு - பதறிய நிருபர்கள்!

  Shanthini   | Last Modified : 09 Jan, 2018 12:02 pm


கூட்டு எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, திடீரென்று துருபிடித்த வளை உயர்த்திப் பிடித்ததால் நிருபர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இலங்கையின் மகிந்த ராஜபக்சே தலைமையிலான கூட்டு எதிரணியின் இடம்பெற்றுள்ள பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில மற்றும் அக்கட்சியின் சில உறுப்பினர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்று ஆண்டு நிறைவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர். அப்போது அவர்கள் தங்கள் கைகளில், துருபிடித்த வாளை உயர்த்திப் பிடித்தனர். இதனால், நிருபர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வாளை உயர்த்தி பிடித்தபடியே பேட்டி அளித்தனர். அப்போது உதய கம்மன்பில பேசுகையில், "ஆட்சி அதிகாரத்தை அளித்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜனாதிபதி தனது நன்றியை பூரணமாக செலுத்தியுள்ளார். தேசிய கொடியில் உள்ள வாளேந்திய சிங்கத்தின் கூர்மையான வாளினை ஜனாதிபதிக்கு மக்கள் வழங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டு மக்களின் அதிகாரத்தினை அனைவருக்கும் பொதுவானதாக பயன்படுத்த வேண்டும். ஆனால் ஜனாதிபதியின் கையில் உள்ள வாள் துருப்பிடித்துள்ளது. மத்திய வங்கி நிதி மோசடியிலும் ஜனாதிபதியின் நடவடிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது. இதன் காரணமாகவே நாங்கள்  துருப்பிடித்த வாள்களுடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டோம்" என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close