யாழ்- தொடரும் துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்

  Shanthini   | Last Modified : 09 Jan, 2018 02:00 pm


இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பளை பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யாழ்ப்பாணம் பளைப்பகுதியைச் சேர்ந்த சிவானந்தமூர்த்தி சுரேந்திரன் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். பளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், உயர் சிகிச்சைக்காக யாழ்ப்பாண அரச மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மர்ம நபர்கள் சுரேந்திரன் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுரேந்திரன், கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், கண்ணிவெடி வெடித்ததில் அவர் படுகாயம் அடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ராணுவம் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில், கடந்த 8 ஆண்டுகளில் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றதாக புகார் வந்துகொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு, யாழ்ப்பாணத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். ஆனால், மணல் கடத்தலில் ஈடுபடவில்லை, போலீசார் தவறான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் என்று கூறி பொது மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடிக்கவே பலர் கைது செய்யப்பட்டனர்.

அரியாலைப்பகுதியில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ராணுவத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இப்படி காவல் துறையினர், ராணுவத்தினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவது மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close