இன படுகொலையாளிகளை தண்டிப்பாரா ஜனாதிபதி? அனந்தி கேள்வி

  Shanthini   | Last Modified : 16 Jan, 2018 12:30 pm


இனப் படுகொலையாளிகளைப் பாதுகாக்கும் ஜனாதிபதி, ஊழல் மோசடிகளுக்கு எதிராக வாளைச் சுழற்றுவது விந்தையாக உள்ளது என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கூறியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற நிதி மோசடிகள் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கட்சி பேதமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றங்களைப் பாதிக்கும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தமிழர்களை அழித்தொழித்து அடிமைப்படுத்தி சிங்கள பௌத்த நாடாக இலங்கையை உருவாக்கும் எண்ணமே, நாட்டில் யுத்தம் ஏற்பட காரணமாக அமைந்தது.

இலங்கையின் ஆதிக் குடிகளான தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலைக் குற்றங்களுக்கு உரிய நீதியை வழங்காது உண்மையான நல்லிணக்கத்தையோ, நிலையான சமாதானத்தையோ ஏற்படுத்திவிட முடியாது.

இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு மறுக்கும் ஜனாதிபதி,  மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பது உண்மையில் விந்தையாக உள்ளது. மேலும் இனப்படுகொலைக் குற்றவாளிகளைப் பாதுகாப்பதுடன் அவற்றை மூடிமறைக்கும் தந்திரமாகவும் ஜனாதிபதியின் அறிவிப்பு அமைந்துள்ளது.

ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தனது வாள் வீச்சுக்கு தப்ப முடியாது என்று முழங்கும் மைத்திரிபால சிறிசேனா, தமிழினப் படுகொலையாளிகள் மீது உடனடியான நடவடிக்கையினை எடுப்பதன் மூலமே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்" என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close