இலங்கையில் மதமும் ஒரு பிரச்னை தான்- வடக்கு முதல்வர்

  Shanthini   | Last Modified : 17 Jan, 2018 12:47 pm


இலங்கையில் மதம் ஒரு பிரச்னை இல்லை எனக்கூறுவது தவறானது என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் “இடைக்கால அறிக்கை - மாயைகளை கட்டுடைத்தல்" என்னும் தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர், "தேவையில்லை என விலக்கி விட்ட மதத்தை எம் மீது திணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மத பிரச்னை இலங்கையில் உள்ளது. மத பிரச்னை இலங்கையில் இல்லை என்று கூறவே முடியாது."

"மேலும் தற்போது சர்வதேசத்தில் நிலைமாற்ற நீதிமுறைகள் இரண்டு முக்கிய எதிர்பார்ப்புக்களை முன்னிறுத்தியுள்ளன. ஒன்று அதிகாரப் பரவலாக்கம் மற்றது போர்க் குற்றவாளிகளை தண்டித்தல். இவற்றை சர்வதேச சமூகம் இலங்கையிலும் எதிர்பார்க்கின்றது. போர் முடிவுக்கு 2009ல் வந்திருப்பினும் இனப்பிரச்னை தீர்க்கப்படவில்லை.

அதனால் தான் அதிகார பரவலாக்கம் தேவையுடையதாகின்றது. தற்போதும் 13வது திருத்தச்சட்டம் அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது பெரும்பான்மையினரின் ஆதரவை முன்வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரம் பெரும்பான்மையினரின் கைவசமே தொடர்ந்திருக்கும். இன்று வடமாகாணத்தில் இரட்டை நிர்வாகம் நடைபெற்று வருகின்றது. ஒன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண உறுப்பினர்களின் நிர்வாகம். மற்றையது மத்திய அரசாங்க தரகர்களின் நிர்வாகம்.

இங்கு இந்த இரு தரகர்களும் சேர்ந்தும் சேராமலும் நிர்வாகத்தை நடத்தி வருகின்றார்கள். அதிகார பரவலாக்கத்தில் நாம் எதிர்பார்த்தது நம்மை நாமே ஆண்டு வருவதையே. ஆனால் ஒற்றையாட்சியின் கீழ் அதிகார பரவலாக்கம் என்ற போர்வையில் எமக்குக் கிடைத்தது மத்திய அரசின் ஊடுறுவல்களே. இவ்வாறு ஊடுறுவல்கள் தொடர்ந்து இருந்தால் மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட போகின்றவர்கள் போரில் பாதிக்கப்பட்ட மக்களே. இதனால் ஒற்றையாட்சியை நீக்கி சமஷ்டி ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும் என்று கேட்டுவருகின்றோம்" என்றார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.