எல்லை தாண்டி மீன் பிடித்தால் அதிக அபராதம்- இலங்கையில் மசோதா நிறைவேற்றம்

  Shanthini   | Last Modified : 24 Jan, 2018 05:41 pm


இலங்கை எல்லையில் அத்து மீறி மீன் பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கு அதிக அபராதம் விதிக்கும் வகையிலான மசோதா ஒன்று இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை எல்லையில் அத்து மீறி நுழையும் மீனவ படகுகளுக்கு அபராதம் விதிக்கும் சட்டம் இலங்கையில் 1979ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வரும் நோக்கில் மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். 

அதன்படி, இலங்கை கடல் எல்லைப் பகுதிக்குள்  எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அதிக பட்ச அபராத தொகை விதிப்பதே இந்த மசோதாவின் பிரதான நோக்கம். மேலும், 'சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்க வேண்டுமென்றால், மீனவர்கள் ஒரு மாத காலத்திற்குள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அபராத தொகை செலுத்தி மீட்டுக்கொள்ளலாம்.

ஒரு மாதத்திற்கு மேல் எங்களிடம் இருக்கும் படகுகள் அரசுடைமையாக்கப்படும். மேலும், ஒரு மீனவர் 3 முறைக்கு மேல் கைதானால் அவருக்கு அதிகபட்ச தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்' என்பன போன்ற அம்சங்கள் மசோதாவில் இடம்பெற்றுள்ளன. பிற்பகலில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா மீது நீண்ட விவாதம் நடைபெற்றது. இறுதியில் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் படகு மற்றும் கப்பல்களுக்கு தற்போது இருக்கும் 15 லட்சம் ரூபாய் என்ற அளவிலான அபராதம் 17.5 கோடி  ரூபாய் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் இந்த முடிவால் தமிழக மீனவர்கள் அதிகம் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் தரப்பில் கூறுகையில், 'இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஏற்கனவே ஒருவித பயத்துடன் தான் நாங்கள் மீன்பிடிக்கச் செல்கிறோம். தற்போது அதிகபட்ச சிறைத்தண்டனை மற்றும் அபாரதத்தால் எங்கள் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளது. இதற்கு இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close