இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு! நடந்தது என்ன?

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2018 11:56 am

sri-lanka-president-dissolves-parliament-sets-january-snap-poll

இலங்கையின் பரபரப்பான அரசியல் சூழலில் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.  மேலும், வருகிற ஜனவரி 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.  

இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு அவரை அதிரடியாக பதவி நீக்கம் செய்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேன. தொடர்ந்து, ராஜபக்சேவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி, அவரை பிரதமராக பதவியேற்க அழைத்து, அவரும் இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். 

இந்த விவகாரம் குறித்து உலக நாடுகள் பலவும் தங்களது கருத்துக்களை கூறி வந்தன. இலங்கையை பொறுத்தவரை ரணில் பதவியினை பறித்துவிட்டு ராஜபக்சே பதவியேற்றதற்கு எதிராக அங்கு போராட்டங்கள் நடைபெற்றன. அரசியல் சட்டத்தை மீறி அதிபர் நடந்துகொள்கிறார் என சிறிசேனா மீது உலக நாடுகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ஆனால் அதிபர் சிறிசேன, ராஜபக்சேவை பதவியில் வைக்க அனைத்து வித நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார் என இலங்கை செய்தி வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.

ஆனால் ரணில் விக்ரமசிங்கே தான் பிரதமர் பதவியில் நீட்டிக்கப்போவதாகவும், தன்னை நீக்க அதிபருக்கு அதிகாரமில்லை என தெரிவித்து பிரதமர் மாளிகையை விட்டு வெளியேற மறுத்து விட்டார். இருப்பினும் நாடாளுமன்றத்தை கூட்டி, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

முன்னதாக, நவம்பர் 16ம் தேதி வரை நாடாளுமன்றம் முடக்கப்படுவதாக அறிவித்த அதிபர் சிறிசேன நவம்பர் 2ம் தேதியே அதனை தளர்த்துவதாகவும் கூறினார். பின்னர் அதிபர், சபாநாயகர் கரு ஜெயசூரியாவை சந்தித்த பிறகு நாடாளுமன்ற குழுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த ஒரு பரபரப்பான சூழலில் தான் நேற்று நள்ளிரவில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதனை அதிபர்  மைத்ரிபால சிறிசேனா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் இருப்பதால் தான் அதிபர் இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், வருகிற ஜனவரி 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் ஜனவரி 17ல் புதிய அமைச்சரவை பதவியேற்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், வருகிற 19ம் தேதி தொடங்கி, 26ம் தேதியுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றம் 225 உறுப்பினர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த  அதிரடி நாடாளுமன்றம் கலைப்பினால் இலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.