இலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 100யைத் தாண்டியது; 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

  முத்துமாரி   | Last Modified : 21 Apr, 2019 01:07 pm
death-toll-rises-to-102-in-srilanka-blasts

இலங்கையில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததில், பலி எண்ணிக்கை 102யைத் தாண்டியுள்ளது. 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 

ஈஸ்டர் பண்டிகையையொட்டி, இன்று இலங்கையில் பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், நீர் கொழும்பு தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி என 6 இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளன. 

இதில், 25 பேர் பலியாகியுள்ளதாகவும், 280க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. பின்னர் பலி எண்ணிக்கை 49 ஆக அதிகரித்த நிலையில் தற்போது 102 பேர் இறந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மட்டகளப்பில் 27 பேர், நீர்கொழும்பில் 50 பேர், கொழும்பில் 25 பேர் என மொத்தம் 102 பேர் பலியாகியுள்ளனர். 

குண்டுவெடிப்பு நடந்த இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரம்சிங்கே பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு வருகின்றனர். 

கொழும்பு ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குவர் என்று கூறப்பட்டுள்ளது. 

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பார்வையாளர் பகுதி மூடப்பட்டுள்ளது. விமானப் பயணிகளை தவிர ஏனையவர்கள் வளாகத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. 

ஈஸ்டர் பண்டிகையை அன்று, தேவாலயங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close