இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் கேரளா மற்றும் காஷ்மீருக்கு சென்று வந்துள்ளனர் என்று இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையன்று இலங்கையில் உள்ள கொழும்புவில் உள்ள தேவாலயம் உள்பட 8க்கும் மேற்பட்ட இடங்களில் தற்கொலை படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 359க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகே தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், ஈஸ்டர் தாக்குதல் பயங்கரவாதிகள், தாக்குதலுக்கு முன் இந்தியாவில் உள்ள கேரள மாநிலம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சென்று வந்துள்ளனர் என்ற தகவல் தங்களுக்கு கிடைத்துள்ளது என்றார்.
மேலும் எந்த நோக்கத்தோடு அவர்கள் இந்தியா சென்றனர் என்பது தெரியவில்லை என்றாலும் பயிற்சி எடுக்க அல்லது அங்கிருக்கும் பயங்கரவாத அமைப்புகளுடன் ஆலோசனை நடத்த சென்றனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
newstm.in