இலங்கை மண்ணில் இன்னொரு ராஜபக்சே: சீனாவுக்கு கொண்டாட்டம்?

  விசேஷா   | Last Modified : 18 Nov, 2019 02:53 pm
special-article-about-srilanka-election

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த கோத்தபய ராஜபக்சே வெற்றிபெற்றுள்ளார். விரைவில் அந்நாட்டு அதிபராக பதவியேற்கவுள்ள அவர், தன் சகோதரரும், முன்னாள் அதிபருமான மஹிந்த ராஜபக்சே வழியில் நாட்டை வழிநடத்துவார் எனில், இலங்கையில் அமைதி என்பது கேள்விக்குறியே.

ஆம், மஹிந்த ராஜபக்சேவின் இளைய சகோதரரான இவர், இளம் வயதிலேயே அந்நாட்டு ராணுவத்தில் இணைந்து லெப்டினென்ட் கர்னல் அந்தஸ்துக்கு உயர்ந்தவர். பின் விருப்ப ஓய்வு பெற்று அமெரிக்கா சென்றார். அங்கு கணிப்பொறி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவை பெற்று நாடு திரும்பிய இவர், 2005ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், அண்ணன் மஹிந்த ராஜபக்சே வெற்றிக்காக பல்வேறு வியூகங்களை வகுத்தார். 

இவரின் வழிநடத்தலில் அந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்சே வெற்றி பெற்று இலங்கை அதிபராக பொறுப்பேற்றார். அதுவரை இந்தியாவிற்கு ஆதரவான அல்லது இந்தியா வழிநடத்தலின் பேரில் நட்பு நாடக செயல்பட்டு வந்த இலங்கை, நம்மை போட்டியாளராக பார்க்கும் சீனாவுடன் நெருக்கத்தை அதிகரித்தது. 

விளைவு, இலங்கையில் துறைமுகங்கள், விமானநிலையங்களை நிறுவி அவற்றை நிர்வகிக்கும் அதிகாரமும்  சீனாவுக்கு வழங்கியது மஹிந்த ராஜபக்சே அரசு. இதன் மூலம், தெற்காசிய பிராந்தியத்தில், சீனா தன் ஆதிக்கத்தை செலுத்த நினைத்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டது.

அப்போது நம் நாட்டில் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இலங்கையின் நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் விட்டதும் சீனாவிற்கு மிக சாதகமாக அமைந்தது. இதை தொடர்ந்து, அந்நாட்டில் பல ஆண்டுகளாக நீடித்த விடுதலை புலிகள் - இலங்கை ராணுவத்திற்கு இடையிலான போர் இறுதிக்கட்டத்தை எட்டியது. 

மஹிந்த ராஜபக்சே அரசில் பாதுகாப்பு துறை செயலராக இருந்த கோத்தபய ராஜபக்சே, போர் வியூகங்களை வகுத்தளித்தார். அப்போதைய ராணுவ தளபதி பொன் சேகா, அப்போதைய அமைச்சர் சிறிசேன, மஹிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் கூட்டணியில் விடுதலை புலிகள் வீழ்த்தப்பட்டனர். 

அதுமட்டுமின்றி, அப்பாவி தமிழர்கள் பலரும் கொல்லப்பட்டனர். தமிழர்கள் ஒடுக்கப்பட்டனர். இதை பிரசாரம் செய்தே சிங்களர்களின் பெருவாரியான ஓட்டுகளை பெற்று, மஹிந்த ராஜபக்சே மீண்டும் அதிபரானார். தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்த மஹிந்த, இந்தியாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்ககைளில் ஈடுபட்டார். 

குறிப்பாக, பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு ஆதரவான நடவடிக்கைகள் பலவற்றை செயல்படுத்தினார். ஹம்பன்தொட்டா துறைமுகம் ஆகட்டும், அதை ஒட்டிய சர்வதேச சரக்கு கையாளும் விமான நிலையம் ஆகட்டும் அனைத்தையும் சீனா ஆக்ரமித்துக்கொண்டது. 

அது தவிர, வங்கக்கடல், இந்திய பெருங்கடல், அரபிக்கடலை சுற்றி முத்துமாலை திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது சீனா. அதற்கு இலங்கையும் ஒத்துழைத்தது. மிகப்பெரிய முதலீடுகள், வர்த்தக ஒப்பந்தம், ஆயுத பயிற்சி, இறக்குமதி என இலங்கையை தன் கைக்குள் வைத்திருந்தது சீனா. இவை அனைத்தும் மஹிந்தவின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. 

இவற்றை, அப்போதைய மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. இந்நிலையில் 2014ம் ஆண்டு நம் நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மலர்ந்தது. இலங்கையுடனான வெளியுறவு கொள்கையில் பல்வேறு மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டன. 

இலங்கையில் மஹிந்த தலைமையிலான ஆட்சியில் நடந்த பல ஊழல்கள், மக்கள் விரோத நடவடிக்கைகளால் அவரது கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டது. அப்போதுதான் அவரது அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகித்த சிறிசேன, மஹிந்த ராஜபக்சேவுக்கு எதிராக அதிபர் தேர்தலில் களம் இறங்கினார். 

தமிழர்களுக்கு ஆதரவான பேச்சுக்களால் தமிழர் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 2015ல் நடந்த அதிர்பர் தேர்தலில் வெற்றியும் கண்டார். அவர் ஆட்சி பொறுப்பேற்ற பின், இந்தியாவுடனான இலங்கையின் உறவில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. சொல்லப்போனால், சிறிசேன வெற்றி பெற வேண்டும் என்பதே இந்திய அரசின் எண்ணமாகவும் இருந்தது.

மஹிந்த மீண்டும் பதவிக்கு வராதது, சீனாவுக்கு  பின்னடைவை ஏற்படுத்தியது. 2015 முதல் இந்திய - இலங்கை உறவு  முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறப்பாக  இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், மஹிந்தவின்  பினாமியாக கருதப்படும், அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். இதில் சீனாவின் தலையீடு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

சர்வதேச அரசியலில் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்த ராஜபக்சேவின் சகோதரரே, இலங்கையில் அதிபராகவுள்ளது, நமக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாகவே பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்த தேர்தல் முடிவு சீனாவிற்கு பெரும் சாதகமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. 

தெற்காசிய பிராந்தியத்தில் தற்போது கோலோச்சும் இந்தியா, தன் செல்வாக்கை தொடர இலங்கையை தன் கட்டுப்பாட்டிலும், வழி நடத்தலில் வைத்திருப்பதோடு, அந்நாட்டை சீனாவுக்கு சாதகமான முடிவுகளை எடுக்க விடாமல் தடுப்பது அவசியம். இந்த தேர்தல் முடிவுகளால் சீனா மீண்டும் சந்தோஷத்தில் குதிப்பதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சீனாவின் சந்தோசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்தியாவின் பாதுகாப்பையும், வர்த்தக, பொருளாதார முன்னேற்றத்தையும் காக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. அரசும் அதை உணர்ந்து செயல்படும் என நம்புவோமாக!


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close