இந்திய மாணவர்கள் விசா பெற கடும் கட்டுப்பாடு: அமெரிக்காவை அடுத்து இங்கிலாந்தும் கெடுபிடி

  Padmapriya   | Last Modified : 17 Jun, 2018 03:38 pm
students-outraged-as-uk-excludes-india-from-relaxed-study-visa-rules

மாணவர்கள் எளிதாக விசா பெறும் பட்டியலிலிருந்து இந்தியாவை இங்கிலாந்து அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் அங்கு சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் இனி கடுமையான விதிமுறைகளை சந்திக்க நேரிடும்.

ஜூலை மாதம் முதல் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய 4 அடுக்கு விசா விதிமுறைகளை அதன் அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு மாணவர்கள் எளிதாக விசா பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

4 அடுக்கு விசா தொடர்பான குடியேற்ற கொள்கை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அது தொடர்பான பட்டியலில் அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, சீனா, பஹ்ரைன், செர்பியா உள்ளிட்ட 25 நாடுகள் இடம் பிடித்துள்ளன. இந்த நாடுகளின் மாணவர்கள் விசாவிற்கு விண்ணப்பம் செய்வதில் மிகவும் எளிதான வழிமுறைகள் காட்டப்பட்டுள்ளது.

அதே நேரம் ஏற்கனவே இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த இந்தியா திடீரென நீக்கப்பட்டுள்ளது. ஆகவே, இதுவரை பின்பற்றப்பட்டு வந்த எளிமையான வழிகள் மூலம் இந்திய மாணவர்கள் அங்கு சென்று படிக்க முடியாது. அதீத ஆங்கில புலமை, அதிக செலவு என பல நடைமுறை சிக்கல்கள் இதில் அடங்கும். 

இதற்கு தகுதி ஆவணங்களும் சான்றுகளும் அதிக அளவில் தாக்கல் செய்யப்பட வேண்டியிருக்கும். இங்கிலாந்து அரசின் இந்த முடிவு இந்திய மாணவர்களையும், மத்திய அரசையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இதுபற்றி இந்திய வம்சாவளி தொழில் அதிபரும், இங்கிலாந்துக்கான சர்வதேச மாணவர்கள் விவகார கவுன்சில் தலைவருமான கரண் பிலிமோரியா கூறும்போது, "இங்கிலாந்தின் இந்த நடவடிக்கை இந்தியாவை அவமானப்படுத்துவதாக உள்ளது. இங்கிலாந்து அரசாங்கம் இந்திய மாணவர்களுக்கு பெரும் அநீதியை இழைத்தும் உள்ளது" என்றார்.

இது குறித்து இங்கிலாந்துக்கான இந்திய தூதர் ஒய்.கே.சின்காவும் இப்பிரச்னையை எழுப்பியுள்ளார். 

அமெரிக்காவில் பணிபுரிவோரின் துணைவர்களுக்கு பணி அனுமதி வழங்கும் எச்–4 விசாவில் அதிரடி மாற்றம் ஏற்படுத்தும் முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது. இந்தியர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் இந்த முடிவுக்கு அந்த நாட்டின் 130 எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இது குறித்த பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close