தினமும் 2 கிலோ வசைகளை வாங்குகிறேன்: பிரிட்டனில் மோடி 'ஓபன்' பதில்கள்

  Padmapriya   | Last Modified : 19 Apr, 2018 02:23 pm

சிலருக்கு ஆசிரியர் பணி, சிலருக்கு மருத்துவர் பணி கிடைத்திருப்பது போல் எனக்கு பிரதமர் என்ற பணி கிடைத்துள்ளது. தினமும், ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வரை வசைகளை எதிர்கொள்வதே தனது ஆரோக்கியத்துக்கு காரணம் என்று பிரதமர் மோடி கிண்டலாகப் பேசினார்.

காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஸ்வீடனிலிருந்து பிரதமர் மோடி லண்டன் சென்றுள்ளார். அங்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை சந்தித்து இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவது குறித்து பேசினார். இரு தலைவர்களும், எல்லை தாண்டிய பயங்கரவாதம், விசா முறை மற்றும் சட்டவிரோதமாக குடியேறிவர்கள் குறித்த ஒப்பந்தம் புதுப்பித்தல் பற்றி விரிவாக பேசினர்.

பின்னர், லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் சென்ட்ரல் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில், பொதுமக்களின் கேள்விகளுக்கு விடையளித்து பேசினார். சென்ட்ரல் ஹாலில் குழுமியிருந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் நேரடியாக எழுப்பிய கேள்விகள் எழுப்பினர். மேலும் சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளை, கவிஞரும், எழுத்தாளருமான பிரசூன் ஜோஷி, பிரதமர் மோடியிடம் கேட்டார். அந்த கேள்விகளுக்கு பதிலளித்து, பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அதன் விவரம்...

"இந்தியா, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட நாடு. அதன் 125 கோடி மக்களின் சேவகனாக இங்கு வந்துள்ளேன். சாதாரண டீ விற்கும் நபர் கூட, நாட்டின் பிரதமர் ஆக முடியும் என்பதே, ஜனநாயகத்தின் சிறப்பு. நம் உறவினர்களுக்காக உழைக்கும் போது, அது நமக்கு சுமையாக தெரிவதில்லை. நாட்டின், 125 கோடி மக்களையும் என் குடும்பத்தினராகவே நினைக்கிறேன். எனவே, நாட்டிற்காக உழைப்பதில், எனக்கு எந்த சுமையும் தெரிவதில்லை.

எனக்கு அரசியல் குடும்ப பின்னணி எதுவும் இல்லை. எனவே, நாட்டிற்கு உழைக்கும் நோக்கத்துடன் மட்டுமே செயலாற்றி வருகிறேன்.

எளிமையான மக்களுக்காக யோசிக்கிறேன்:

நான் மிகப் பெரிய விஷயங்களை பற்றி யோசிப்பதை விட, அத்தியாவசிய விஷயங்களை பற்றி யோசிக்கிறேன். குழந்தைகளுக்கு கல்வி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, வயது முதிர்ந்தோர்க்கு மருத்துவ சிகிச்சை. இவை மூன்று சிறப்பான வகையில் கிடைத்துவிட்டால், அந்த நாடு முன்னேற்றப்பாதையில் செல்வதை யாராலும் தடுக்க முடியாது. இதனை மனதில் கொண்டு தான் எப்போதும் யோசிப்பேன். எனது திட்டங்கள் இவர்களுக்கானது தான்.

உடல் ஆரோக்கிய ரகசியம் தெரியுமா?

இளைஞர்கள், உடலை உறுதியுடன் வைத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியம் தான் அவசியமானது. என் இறுதி காலம் வரை, இதே போல், ஓடி, ஆடி, உழைத்தபடி இருக்க வேண்டும் எனவே விரும்புகிறேன்.

என் உடல் ஆரோக்கியம் குறித்து பலரும் கேள்வி எழுப்புகின்றனர். அந்த ரகசியத்தை இப்போது கூறுகிறேன். நான் தினமும் ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வரை வசைகளை எதிர்கொள்கிறேன். என் மீதான வசைகள், விமர்சனங்களுக்காக நான் சோர்ந்து போவதில்லை. விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். என் மீதான எதிர்மறை விமர்சனங்களையும் நான் வீணடிப்பதில்லை. அதிலிருந்தும் எதை கற்கலாம் என்று தான் யோசிப்பேன்.

உடல் மற்றும் உள்ளத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் சோர்ந்து போகாமல் தொடர்ந்து செயல்பட முடிகிறது" என்றார்.

இதனிடையே, லண்டனில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியர்கள் ஆர்ப்பட்டாத்தில் ஈடுபட்டனர்.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை கண்டிக்கத்தக்கது:

மோடி மேலும் கூறும்போது, "இயற்கை பேரிடர் நிகழும் போது, மீட்புப் பணிகளில், அரசு இயந்திரத்தின் செயல்பாட்டை விட, பொதுமக்களின் செயல்பாடு அதிகம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதுபோலவே, ஒவ்வொரு செயலிலும், மக்கள் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்.

பயங்கரவாதத்தை வேரறுப்பதில் எப்படி செயல்பட வேண்டுமோ அந்த வகையில் இந்த அரசு செயல்படுகிறது. யாருக்கு எந்த வகையில் பதில் அளிக்க வேண்டுமோ அப்படி பதில் அளிக்கப்படுகிறது. பாக்., பயங்கரவாதிகளுக்கு எதிரான, சர்ஜிக்கல் ஸ்டிரைக் விவகாரத்திலும், அந்த வகையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பெண்கள் மீதான வன்கொடுமைகள் கண்டனத்திற்குரியவை. சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை ஒருபோதும் ஏற்க முடியாது. பெண் குழந்தைகளை பாதுகாப்பதில், நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது. இதில் அரசியலை கலக்க கூடாது" என்றார்.

லண்டனில் லிங்காயத் சமூக சீர்திருத்தவாதி பசவேஷ்வரா சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆசிஃபா கூட்டு பலாத்கார சம்பவத்துக்கு நியாயம் கேட்டு, மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த லண்டன் மக்கள்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.