ட்ரம்பின் நெருக்கடிக்கு அஞ்சவில்லை: மீண்டும் முரண்டு பிடிக்கும் வட கொரியா

Last Modified : 08 May, 2018 09:34 pm

தங்கள் நாடு அமைதி பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்ததற்கு, அமெரிக்க நெருக்கடி காரணம் அல்ல, அவ்வாறு அந்த நாடு நினைத்தால் மீண்டும் பழைய நிலையை எடுக்க தயங்க மாட்டோம் என வடகொரியா தெரிவித்துள்ளது அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் விதமாக உள்ளது. 

உலக நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து, கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத சோதனைகளை நடத்தி வந்த வட கொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தது. 

இப்படி பல காலமாக நடந்துவர, இந்த ஆண்டு தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்களின் பின்னர் வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் இணக்கமான சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து கடந்த மாதம் 27-ஆம் தேதி வடகொரிய மற்றும் தென்கொரிய தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அத்துடன் வடகொரிய அதிபர் மற்றும் அமெரிக்க அதிபருடனான சந்திப்பு தொடர்பான ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன.

இடையே, வடகொரியாவுக்கு அரசியல் ரீதியில் கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்ததால்தான் அணு ஆயுத சோதனைகளை நிறுத்தவும், சமரசப் பேச்சுவார்த்தைக்கும் வடகொரியா முன் வந்ததாக அமெரிக்கா கூறி வருகிறது. இது வடகொரியாவை எரிச்சலூட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இது தொடர்பாக கூறுகையில், "அதிபர் கிம் ஜோங் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் சந்தித்து பேசியபின் அமைதி பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது. கொரிய தீபகற்பம் அமைதியையும், நல்லிணக்கத்தையும் நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது. அதை சீர்குலைக்கும் விதத்தில் அமெரிக்காவின் பேச்சு உள்ளது. இதுபோன்று அமெரிக்கா தொடர்ந்து பேசினால், வடகொரியா மீண்டும் தனது பழைய பாதையில் பயணிக்கத் தயங்காது" என்றார்.

வட கொரியா இணக்கமாக மாறும் என்று பெரிதும் நம்பப்பட்டு வந்த வேளையில் இதுபோலான பேச்சு, உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன் அமைதி முயற்சிகளில் இது லேசான பின்னடைவாகவும்  கருதப்படுகின்றது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close