கண்டனத்துக்கு பணிந்தது: 522 குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைத்த அமெரிக்கா

  Padmapriya   | Last Modified : 24 Jun, 2018 05:04 pm
522-immigrant-children-reunited-with-families-us-says

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட 522 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. 

எல்லைப்பகுதிகளில் சட்டவிரோத குடியேறிகளாக வந்த அகதிகளை கைது செய்த அமெரிக்க அரசு, அவர்களின் குழந்தைகளை தனியாக பிரித்து வேறு இடத்துக்கு கொண்டு சென்றது. இப்படி பிரிக்கப்பட்ட 522 குழந்தைகள், அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். குடியேற்றம் தொடர்பான காரணங்கள் இன்றி, வேறுசில விவகாரங்களால் பெற்றோரிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள போர்ட் இஸபெல் குடியுரிமைத்துறை அலுவலகத்தில் பிரிக்கப்பட்ட குழந்தைகள் தொலைபேசி மூலம் பெற்றோருடன் தொடர்புகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கென தனியாக அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உள்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்குள் மெக்சிகோ எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார். 

குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவானது. 

இந்த உத்தரவை அடுத்து ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் 31-ம் தேதிவரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 1940 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

ஜூன் மாதம் 20-ம் தேதி நிலவரப்படி, அவர்களுடன் வந்த 2053 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.  சட்டவிரோத குடியேறிகளிடம் பாரபட்சம் பார்க்க போவதில்லை என்ற ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளுக்கு  சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. 

குறிப்பாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மனைவி மெலினியா ட்ரம்ப், முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் மனைவி லாரா புஷ் உள்ளிட்டோரும், ட்ரம்பின் குடியரசு கட்சி உறுப்பினர்களும் கூட கண்டனம் தெரிவித்தன. இதைதொடர்ந்து, குழந்தைகளை அகதிகளிடம் இருந்து பிரிக்கும் உத்தரவை டிரம்ப் ரத்து செய்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close