நெருக்கடியில் ட்ரம்ப்: அட்டர்னி ஜெனரல் அதிரடி நீக்கம்!

  shriram   | Last Modified : 08 Nov, 2018 04:56 am
trump-fires-attorney-general-rod-rosenstein

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தலில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசு கட்சி கணிசமான அளவு இடங்களை இழந்த நிலையில், தற்போது அதிபர் ட்ரம்ப் தனது அட்டர்னி ஜெனரல் ஜெப் செசன்ஸை பணி நீக்கம் செய்துள்ளார். 

2016 அதிபர் தேர்தலின் போது, ரஷ்யாவுடன் டொனால்ட் ட்ரம்ப்புக்கு நெருக்கமான அதிகாரிகள் பலர் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதில், ட்ரம்ப், அவர் மகன் ட்ரம்ப் ஜுனியர் உள்ளிட்ட பலரின் நடவடிக்கைகள் குறித்தும் விசாரிக்க, சிறப்பு கமிட்டி நியமிக்கப்பட்டது. பொதுவாகவே அட்டர்னி ஜெனரல் தலைமையில் சிறப்பு கமிட்டி அமைக்கப்படுவது வழக்கம்.

ஆனால், தேர்தலுக்கு முன், ரஷ்ய அதிகாரிகளை அட்டர்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் நேரில் சந்தித்திருந்தார். இதனால், சிறப்பு கமிட்டி விசாரணை தனது தலைமையில் நடப்பது சரியிருக்காது என கூறி, அதை துணை அட்டர்னி ஜெனரலின் தலைமைக்கு மாற்றினார். துணை அட்டர்னி ஜெனரல் ராட் ரோசன்ஸ்டைன், முன்னாள் எஃப்.பி.ஐ தலைவர் ராபர்ட் முல்லர் தலைமையில் சிறப்பு கமிட்டியை நியமித்தார். இந்த சிறப்பு கமிட்டி, இதுவரை ட்ரம்ப்புக்கு நெருக்கமான அதிகாரிகள் பலரை குறிவைத்து விசாரித்து வழக்கு பதிவு செய்துள்ளது. 

முக்கியமாக, ட்ரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன், தேர்தல் பிரச்சார குழு தலைவர் பால் மேனபோர்ட் உட்பட பலர் இதில் கைது செய்யப்பட்டு, ட்ரம்ப்புக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதற்கிடையே, சிறப்பு கமிட்டி விசாரணை தன்னையும் தனது குடும்பத்தையும் நோக்கி வருவதால், அதை தடுக்க ட்ரம்ப் முயற்சி செய்து வந்தார். ஆனால், அட்டர்னி ஜெனரல் மற்றும் துணை அட்டர்னி ஜெனரல், ட்ரம்ப்பின் பேச்சை கேட்காத நிலையில், அவர்களை நீக்கிவிட்டு, புதிய அட்டர்னி ஜெனரல் மூலம், சிறப்பு கமிட்டியை முடக்க ட்ரம்ப் திட்டமிட்டு வந்தார். 

இடைக்கால தேர்தலில், ட்ரம்ப்பின் குடியரசு கட்சி நாடாளுமன்றன் கீழ் சபையை இழந்தது. வரும் ஜனவரி மாதம், புதிய உறுப்பினர்கள் பதவியேற்கின்றனர். பதவியேற்றவுடன், ட்ரம்ப் மீது மேலும் பல கட்ட விசாரணைகள் பாயும் என எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எச்சரித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிந்த அடுத்த நாளே, அட்டர்னி ஜெனரல் ஜெப் செசன்சை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப். இதற்கு எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close