கஷோகி கொலை குறித்த ஆடியோவை கேட்க விருப்பமில்லை: ட்ரம்ப்

  Newstm Desk   | Last Modified : 19 Nov, 2018 05:58 am
don-t-want-to-listen-to-kashoggi-audio-donald-trump

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டது தொடர்பான ஆடியோ பதிவு அமெரிக்க அரசிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதை கேட்க தனக்கு விருப்பமில்லை என அந்நாட்டு அதிபர் ட்ர்மப் தெரிவித்துள்ளார்.

சவுதி அரசுக்கு எதிராக எழுதி வந்த அந்நாட்டை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார். தூதரகத்திற்கு சென்ற அவர் இரண்டு வாரங்களுக்கும் மேல் மாயமாகி இருந்தார். பின்னர், அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. சர்வதேச நெருக்கடிக்கு பின், தூதரகத்தில் ஏற்பட்ட தகராறில் அவர் இறந்துவிட்டதாக சவுதி அரசு தெரிவித்தது.

ஆனால் திட்டமிட்டு சித்திரவதை செய்து கஷோகி கொலை செய்யப்பட்டதாக, துருக்கி அரசு தெரிவித்தது. மேலும் கஷோகியின் உடல் குறித்த எந்த ஆதாரங்களையும், சவுதி அரசு தரவில்லை. உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, அமிலத்தில் கரைக்கப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், இது குறித்து விசாரணை நடத்திவந்த அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ, கஷோகி கொலை செய்யப்பட்டதற்கு, சவுதி இளவரசர் சல்மான் தான் காரணம் என தெரிவித்தது. சவுதி இளவரசர் சல்மானுக்கு நெருக்கமானவர்கள், அவரது ஆணையின் பேரில் கஷோகியை கொலை செய்ததாக துருக்கி அரசும் தெரிவித்திருந்தது. ஆனால் சவுதி அரசு சில சமூக விரோதிகள் தான் இந்த கொலையை செய்ததாக கூறியது.

தூதரகத்தில் வைத்து கஷோகி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அப்போது பதிவு செய்யப்பட்ட ஒரு ஆடியோ தங்களிடம் உள்ளதாகக் துருக்கி அரசு கூறிவந்தது. இந்த ஆடியோ அமெரிக்க அரசிடம் பகிரப்பட்டுள்ளது. அந்த ஆடியோவை கேட்டீர்களா என ட்ரம்ப்பிடம் ஒரு செய்தியாளர் கேட்டபோது, அவர் இல்லை என்றார். "அந்த ஆடியோ டேப் எங்களிடம் உள்ளது. அதை நான் கேட்கவில்லை. அது மிகவும் துயரமான ஒரு பதிவு. அது பற்றி எனக்கு முழுவதும் விளக்கப்பட்டுள்ளது. அதனால் அதை கேட்க வேண்டிய அவசியம் இல்லை," என கூறியுள்ளார்.

சவுதி அரசு தான் கஷோகியை கொலை செய்தது என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ள போதிலும், அதை ட்ரம்ப் ஏற்க மறுக்கிறார். சவுதி இளவரசருக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தான் நம்புவதாக கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close