சுவர் கட்டும் திட்டமே இல்லை - வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி

  Newstm Desk   | Last Modified : 31 Dec, 2018 05:34 pm
plans-to-build-concrete-wall-was-dropped-long-ago-white-house-chief-john-kelly

அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சுவர் கட்டும் திட்டம் எப்போதோ கைவிடப்பட்டு விட்டதாகவும், எல்லையில் இரும்பு வேலிகளை அமைக்கும் திட்டம் குறித்தே ஆலோசித்து வருவதாகவும், வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி ஜான் கெல்லி கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். 

அமெரிக்காவுக்குள் மெக்சிகோ நாட்டை சேர்ந்த மக்கள் சட்டவிரோதமாக நுழைவதை தடுக்க, சுமார் 2000 கிலோமீட்டர் நீளமுள்ள தெற்கு எல்லையில் மாபெரும் சுவர் கட்டவுள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அதற்கான நிதியை கடந்த இரண்டு ஆண்டுகளில் பெறமுடியாத நிலையில், சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், ட்ரம்ப்பின் குடியரசு கட்சி நாடாளுமன்ற கீழ் சபையில் பெரும்பான்மையை இழந்தது. 

வரும் 20ம் தேதி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதவியேற்ற பின்னர், தனது சுவர் திட்டத்திற்கு நிதி நிச்சயம் கிடைக்காது என தெரிந்து கொண்ட ட்ரம்ப், அமெரிக்க அரசு இயங்குவதற்கான பட்ஜெட்டை முடக்கினார். சுவர் திட்டத்திற்கு 5 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்காவிட்டால், அமெரிக்க அரசு துறைகளை இயங்க விடமாட்டேன், என கூறிவருகிறார். கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட கொண்டாட்டங்களுக்கு இடையே, அரசு பட்ஜெட் இல்லாததால், அமெரிக்க அரசு பணியாளர்கள் சம்பளம் பெறாமல் வீடு திரும்பியுள்ளது, அந்நாட்டு மக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 

இதற்கிடையே, ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி ஜான் கெல்லி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக சமீபத்தில் தெரிவித்தார். விரைவில் அவரது பதவிக்காலம் முடியும் நிலையில், ஒரு ஊடகத்திடம் நேற்று பேட்டியளித்தார். அதில் அவர், எல்லையில் கான்க்ரீட் சுவர் கட்டும் திட்டம் எப்போதோ கைவிடப்பட்டதாகவும், இரும்பு பிளேட்டுகள் கொண்ட வேலிகளை அமைப்பது தான் நடைமுறையில் சாத்தியம் என தெரிவித்துள்ளார். எல்லையில் உள்ள பல்வேறு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நிபுணர்களிடம் பேசியதில், சுவர் காட்டுவது சாத்தியமில்லை என்று தெரியவந்துள்ளதாக  அவர் கூறியுள்ளார். 

இந்நிலையில், வெள்ளை மாளிகையிலேயே ட்ரம்ப் கூறும் சுவர் திட்டத்திற்கு ஆதரவு இல்லாத நிலையில், அதற்காக அரசையே பிடிவாதமாக அவர் முடக்கி வைத்திருப்பது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close