வரிவிதிப்பை இந்தியா, சீனா நிறுத்தட்டும்: ட்ரம்ப் காட்டம் 

  Padmapriya   | Last Modified : 27 Jun, 2018 02:14 pm
trump-cites-india-as-example-to-defend-his-tariff-decision

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான 100 சதவிகித வரிவிதிப்பு நடைமுறைகளை இந்தியா, சீனா போன்ற நாடுகள் நிறுத்தட்டும், நாங்களும் நிறுத்துகிறோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டமாக தெரிவித்துள்ளார்.

ஹார்லே டெவிசன் அமெரிக்காவை விட்டு வெளியேறுவதாக அறிவித்தது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, நிருபர்கள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு, ஹார்லே டெவிசன் வெளியேறுவது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதனால், கடுப்பான ட்ரம்ப், "அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் சீனா, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா போன்ற நாடுகள், விதிக்கும் வரி வதிப்பு அதிகமாகவும், சமம் அற்ற நிலையிலும் உள்ளது. அவர்களை எல்லாவற்றையும் நிறுத்த சொல்லுங்கள் நாங்கள் நிறுத்துறோம்" என்றார். மேலும், "ஜி7 மாநாட்டில் நான் கூறியது நினைவிருக்கிறது. எந்த வரியும் வேண்டாம் எந்தத் தடையும் வேண்டாம் என்றேன். எந்த நாடாவது ஒப்புக் கொண்டதா?" என்று சமீபத்தில் கனடாவில் நடந்த ஜி7 மாநாட்டு பேச்சுவார்த்தையை சுட்டிக்காட்டி பேசினார் ட்ரம்ப்.

"சில நாடுகள் எங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாடுகள் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கின்றனர். அப்படியானால் நாங்கள் வரியை உயர்த்தித்தான் ஆக வேண்டும். நாங்கள் தான் அந்த வங்கி. எல்லோரும் சுரண்ட நினைக்கும் வங்கி. இனியும் இடம் கொடுக்க மாட்டோம். கடந்த ஆண்டு சீனாவிடம் 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்தோம். ஐரோப்பிய யூனியனிடம் 151 பில்லியன் டாலர்கள் இழந்தோம். அங்கு எங்கள் விவசாயிகளின் பொருட்களை ஏற்றுமதி செய்ய தடைகள் உள்ளது. அமெரிக்க கார் தயாரிப்புகளின் ஏற்றுமதியும் அங்கு கடினமாக உள்ளது" என்றார் ட்ரம்ப்.

இந்த பரபரப்பான சூழலில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் அடுத்த வாரம் அமெரிக்கா செல்கின்றனர். அங்கு அமெரிக்க அரசு செயலாளர் போம்பியோ மற்றும் பாதுகாப்பு துறை செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸை சந்தித்து பேசுகின்றனர். இந்தியா - அமெரிக்கா இடையே வரிவிதிப்பு விவகாரம் முற்றியுள்ள சூழலில் இவர்களது சந்திப்பு காரசாரமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close