கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரியுங்கள்: ஈரானுக்கு எதிராக சவுதியை தூண்டும் ட்ரம்ப் 

  Padmapriya   | Last Modified : 02 Jul, 2018 01:25 pm
donald-trump-says-saudi-king-salman-agrees-to-ramp-up-oil-production

ஈராக்குக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என சவுதி அரேபியாவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானைத் தனிமைப்படுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். இதனால், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை குறைக்க வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடியாகவே மிரட்டல் விடுத்தார் ட்ரம்ப். அதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. நிலைமையை சமாளிக்க கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று சவுதி அரேபியாவை அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். 

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இவ்வாறு தெரிவித்ததாக வெள்ளை மாளிகை உறுதிபடுத்தியுள்ளது.  சர்வதேச சந்தையில் எண்ணெயின் நிலைத்தன்மையை பாதுகாக்க வேண்டும் என்பதால் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பீப்பாய்கள் வரை சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என சல்மான் பின்னிடம் ட்ரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதை ஏற்றுக்கொண்ட மன்னர் சல்மான் பின், தேவைப்பட்டால் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தங்கள் நாடு தயார் நிலையில் இருப்பதாக உறுதி அளித்துள்ளாராம். இதை, தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் உடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா தன்னிச்சையாக முறித்துக்கொண்டது. தொடர்ந்து அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் தொடரும்படியான அறிவிப்புகளை அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்தது. மேலும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் மாதம் 4ஆம் தேதியுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்தியா உள்பட சர்வதேச நாடுகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

உலக நாடுகளில் எண்ணெய் உற்பத்தியில் தவிர்க்க முடியாத நாடாக விளங்கி வரும் ஈரானுக்கு இப்படி நெருக்கடி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. தற்போது எரிபொருள் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக அமெரிக்கா சவுதியை அணுகியுள்ளது. ஈரானின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியை மட்டுப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close