ரூ.8 கோடியை தானமாக வழங்கியவருக்கு மனநிலை பரிசோதனை

  Newstm Desk   | Last Modified : 13 Nov, 2018 11:25 am
pakistan-man-who-donates-rs-8-crore-have-to-go-medical-check-up

பாகிஸ்தானில் அணை கட்டுமானத் திட்டங்களுக்காக ரூ.8 கோடியை தானமாக வழங்கியவருக்கு மனநிலை பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

பணம் மற்றும் சொத்துக்களை தானமாக வழங்குபவர்களுக்கு வெளியுலகில் பாராட்டு மழை குவியும் என்றாலும், சொந்தக் குடும்பத்திலும், உறவு வட்டத்திலும் அந்த முடிவுக்கு சில நேரங்களில் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். குறிப்பாக, அந்த சொத்தில் பங்கு கேட்கும் உரிமை உடையவர்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால் ஆச்சரியம்தான்.

இப்படியொரு நிலையில், சொத்துக்களை தானமாக வழங்கிய ஒருவர், அதற்காக மனநிலை பரிசோதனையை எதிர்கொள்ளவுள்ளார். பாகிஸ்தானில் அணை கட்டுமானத் திட்டங்களுக்காக வெளிநாடுவாழ் பாகிஸ்தானியர்களும், உள்நாட்டு மக்களும் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று பிரதமர் இம்ரான் கான் கேட்டுக் கொண்டார். அதையடுத்து, ஷேக் சாஹித் என்பவர் தனது ரூ.8 கோடி மதிப்பிலான சொத்துக்களை தானமாக வழங்குவதாக அறிவித்தார்.

இதையடுத்து, சாஹித்தின் மனைவியும், அவர்களது மூன்று மகன்களும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தை நாடினர். தங்களுடைய ஒப்புதல் இல்லாமலேயே சொத்து தானமாக வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். அப்போது சாஹித்துக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏதேனும் கருத்துவேறுபாடு உள்ளதா?, அதன் காரணமாக சொத்துக்கள் தானமாக்கப்பட்டதா என்ற கேள்வியை உச்சநீதிமன்றம் முன்வைத்தது.

ஆனால், சாஹித்தின் மனைவி, மோதல் எதுவும் இல்லை என்று மறுப்பு தெரிவித்த சமயம், தனது கணவருக்கு மனநிலை கோளாறு இருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து, வாரிசுதாரர்களின் ஒப்புதல் இன்றி அணை கட்டுமானத்துக்காக வழங்கப்பட்ட சொத்துக்களை, ஷரியத் சட்டப்படி தானமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும் சாஹித்துக்கு மனநிலை பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close