எய்ட்ஸ் நோயாளிகளின் தனி நபர் ரகசியம் அம்பலம்

  Newstm Desk   | Last Modified : 29 Jan, 2019 12:54 pm
us-man-leakes-personal-data-of-hiv-positive-s-in-singapore

சிங்கப்பூரில், எச்.ஐ.வி., பாதிப்புக்கு உள்ளானோரின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது, அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

எய்ட்ஸ் நோய் தாக்கத்திற்கு முக்கிய காரணமாக உள்ள, எச்.ஐ.வி., பாதிப்புக்கு உள்ளானோர், நீண்ட நாட்கள் தங்கவும், அவர்களை பணியமர்த்தவும், உலகின் சில நாடுகள் அனுமதிப்பதில்லை. அந்த பட்டியலில், சிங்கப்பூரும் உள்ளது. 

ஒரு நபர், சிங்கப்பூரில் பணியாற்றவோ அல்லது நீண்ட நாட்கள் வசிக்கவோ, விசா பெற விண்ணப்பிக்கையில், அவரது மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டிருந்தால், அவருக்கு விசா மறுக்கப்படும். 

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த, மிக்கே பெரேரா புரோச் என்ற நபர், தனக்கு எச்.ஐ.வி., பாதிப்பு இருப்பது தெரிந்தும், மருத்துவ பரிசோதனைகளின் போது, வேறொருவரின் ரத்த மாதிரிகளை சமர்ப்பித்து, தகிடதத்தங்கள் செய்து, சிங்கப்பூரில் பணியாற்றுவதற்கான விசா பெற்றார். 

2008  முதல் சிங்கப்பூரில் வசித்து வந்த புரோச், போலி அறிக்கைகளை சமர்ப்பித்த விபரம், 2017ல் அந்நாட்டு அரசுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, புரோச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறை தண்டனை முடிந்து, சமீபத்தில் விடுதலையான அவர், சிங்கப்பூரிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

சிங்கப்பூரிலிருந்து வெளியேறிய புரோச், அந்நாட்டு மக்களின் மருத்துவ அறிக்கை பற்றிய ரகசியங்களை, இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதன் படி, 2013 ஜனவரி வரை, சிங்கப்பூர் குடிமக்களில், 5,400 பேர் எச்.ஐ.வி., பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாகவும், 2011 டிசம்பர் வரை, சிங்கப்பூரில் வசிக்கும், வெளிநாடுகளை சேர்ந்த,8,800 பேர் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் தெரிவித்துள்ளார். 

அது தவிர, இந்த பாதிப்புக்கு ஆளானோரின் பெயர்கள், அவர்களின் அடையாள ஆவணங்கள், அவர்களின் தனிப்பட்ட போன் நம்பர்கள், அவர்களின் முகவரி உள்ளிட்ட தனிநபர் ரகசியங்களையும் கசியவிட்டுள்ளார்.

அரசின் பாதுகாப்பில் இருந்த இந்த ரகசியங்கள், தனிநபர் ஒருவரால் கசியவிடப்பட்டுள்ளது, அந்நாட்டு அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அங்கு வசிக்கும் பலர் பதற்றம் அடைந்துள்ளனர். 

இந்த ரகசியங்கள் கசிந்தது எப்படி,  அதற்கு காரணம் யார் என்பது குறித்து, விசாரணை நடத்த, அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. புரோச் தற்போது எந்த நாட்டில் இருக்கிறார் எனவும், சிங்கப்பூர் போலீசார் தேடி வருகின்றனர். 


இது போன்ற தகவல் கசிவால், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டாேர் மட்டுமின்றி, அவர்களின் உறவினர்களும் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவர் என, சிங்கப்பூர்வாசிகள் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close